

மதுராந்தகம்: பல்வேறு அரசியல் கட்சிகளின் முக்கிய தலைவர்கள் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில், மதுராந்தகம் தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களுக்கு செல்லும் முக்கிய சாலைகளில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனைகளில் ஈடுபட்டுள்ளனர்.
மதுராந்தகம் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் வரும் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இதனால், தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கண்காணிப்பு மற்றும் சோதனை பணிகளை மேற்கொள்வதற்காக 9 பறக்கும் படை குழுக்களும், 9 நிலையான கண்காணிப்புக் குழுக்களும், 2 காணொளி கண்காணிப்புக் குழுக்களும், 1 காணொளி பார்வை குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், கூடுதலாக 5 கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த பறக்கும் படையினர் மதுராந்தகம் தொகுதியில் உள்ள பல்வேறு இடங்களில் திடீர் வாகன சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். தேர்தல் நாள் நெருங்கி வருவதால் தவெக, திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
முக்கிய சாலைகளில்.. இந்நிலையில், மதுராந்தகம் - செய்யூர் பிரதான சாலை, அச்சிறுப்பாக்கம், மேல்மருவத்தூர் - சோத்துப்பாக்கம், கருங்குழி - திருக்கழுக்குன்றம் உட்பட பல்வேறு முக்கிய சாலைகளில் பறக்கும் படையினர் நேற்று வாகன சோதனைகளில் ஈடுபட்டனர்.
வாகனத்தில் கொண்டு செல்லப்படும் பொருட்கள் மற்றும் ரொக்கப் பணம் ஆகியவற்றுக்கு முறையாக ஆவணங்கள் உள்ளதா என்று சோதனை செய்கின்றனர். பிரச்சாரத்துக்கு வரும் அரசியல் கட்சியினரின் வாகனங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.