

கோப்புப்படம்
திருப்போரூர்: செங்கல்பட்டு மாவட்டம், நெம்மேலியில் ரூ.360 கோடியில் நீர்த்தேக்க திட்டத்திற்கு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம், கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மாமல்லபுரம் சாலை ஆகியவற்றுக்கு இடையே முட்டுக்காடு முகத்துவாரத்தில் இருந்து மாமல்லபுரம் வரை 3,010 ஏக்கர் பரப்பளவில் ரூ.360 கோடியில் 1.6 டிஎம்சி வெள்ள நீரை சேமிக்கும் வகையில், மாமல்லன் நீர்த்தேக்கம் அமைய உள்ளது. இந்த நீர்த்தேக்கத்திற்கான அடிக்கல் நாட்டு விழா, இன்று (19-ம் தேதி) மாமல்லபுரம் அருகே நெம்மேலியில் நடைபெற உள்ளது.
இதற்கிடையே, உப்புநீர் சூழ்ந்த பகுதி மற்றும் பக்கிங்காம் கால்வாய் ஆகியவற்றை மாற்றி அமைப்பதால் மீன்களின் இனப்பெருக்கம் தடுக்கப்படும். இயற்கை சூழல் மாற்றம் ஏற்பட்டு பாதிப்பு ஏற்படும்.கோவளம் முதல் கொக்கில மேடு வரை (35 கி.மீ.) இத்திட்டத்தை செயல்படுத்தும் போது, மீன்பிடித் தொழிலுக்கு பாதிப்பு ஏற்படும்.
மழை, புயல், வெள்ளம் காலங்களில் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாத போது, இந்த உபவடி நில பரப்பில் இறால், நண்டு மற்றும் மீன் ஆகியவற்றை பிடித்து பிழைப்பை நடத்தி வருவதால் இத்திட்டத்தினை மறுபரிசீலனை செய்ய கோரி, பல்வேறு மீனவர் அமைப்புகள் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்நிலையில், மீனவர் அமைப்பு பிரதிநிதிகளுடன் சமாதானக் கூட்டம் நேற்று திருப்போரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் தி.சினேகா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துக் கொண்டார். முன்னதாக, இந்த கூட்டத்தில் நீர்வளத்துறை அதிகாரிகள், படக்காட்சிகள் மூலம் நீர்த்தேக்கம் அமைய உள்ள இடம், பரப்பளவு குறித்து மீனவர்களுக்கு விளக்கினர். 18 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கலந்துக் கொண்டு தங்களின் நிலைப்பாடு குறித்து பேசினார். மீனவர்களின் வாழ்வாதாரம் எந்த வகையிலும் பாதிக்கப்படாது என்றும், இந்த திட்டத்திற்கும், கடல் மீன்களுக்கும் எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாது என்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அமைச்சர் உறுதி: பின்னர் பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன், மீனவர்களின் கருத்துகள் முதல்வர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு உரிய தீர்வு காணப்படும். இந்த திட்டத்தால் சுற்றுப்புற கிராமங்களின் நிலத்தடி நீர் மட்டம் உயர்வதோடு, மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைக்கு பாதிப்பு ஏற்படாமல், அவர்களுக்கு உரிய அனுமதி வழங்கப்படும். படகுகளை நிறுத்திக் கொள்ள இடம் வழங்கப்படும் என்றும் உறுதி அளித்தார்.