தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரம்: தவெக அரசு மீது பெ.சண்முகம் கடும் அதிருப்தி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம்

Updated on
1 min read

சென்னை: ‘ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு காரணமான அனைத்து அதிகாரிகள் மீதும் உரிய துறைவாரியான நடவடிக்கை மற்றும் குற்ற வழக்குப் பதிவு செய்து சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘2018-ம் ஆண்டு ஸ்டெர்லைட்டை எதிர்த்தப் போராட்டத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையின் பொறுப்பற்ற தன்மை, அத்துமீறல் காரணமாக கொல்லப்பட வேண்டுமென்ற நோக்கத்தோடு நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினர்.

இதற்கென அமைக்கப்பட்ட நீதியரசர் அருணா ஜெகதீசன் ஆணையம் விசாரணை நடத்தி தனது பரிந்துரையை அரசுக்கு அளித்தது.

3 ஐ.பி.எஸ். அதிகாரிகள் உட்பட 17 காவல் துறையினர், மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் 3 வட்டாட்சியர்கள் இதற்கு காரணமானவர்கள் என்று அந்த அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டிருந்தனர். அவர்கள் மீது துறைவாரியான நடவடிக்கையும், குற்ற வழக்குப் பதிவு செய்து விசாரிக்கவும் ஆணையம் பரிந்துரை செய்திருந்தது.

31.08.2026 அன்று உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ள கருத்துகள், கொலைக்கு காரணமான அதிகாரிகளை பாதுகாக்கும் நோக்கத்தை கொண்டதாக உள்ளது. இவர்களில் யாரும் தண்டிக்கப்பட மாட்டார்கள் என்பதுதான் நேற்றைய நீதிமன்ற நிகழ்வின் வெளிப்பாடாகும்.

இது ஆளும் வர்க்கத்தின் அடக்குமுறை கருவியாக அரசு அமைப்புகள் செயல்படும் என்பதற்கான மிக வெளிப்படையான நிகழ்வாகும். அந்த வகையில் திமுகவும் தவெகவும் அதிகாரிகளுக்கு ஆதரவான நிலைபாட்டையே எடுத்துள்ளன.

சுற்றுச்சூழல் சீர்கேடுகள் குறித்து மக்கள் சுட்டிக்காட்டியபோதே, ஸ்டெர்லைட் நிர்வாகமோ அல்லது அரசு அமைப்புகளோ நடவடிக்கை எடுத்திருந்தால் இத்தகைய கொடூரம் நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை.

பன்னாட்டு முதலாளி ஒருவரின் நலனை பாதுகாப்பதற்காகவே ஆளும் வர்க்கத்தின் அடியாளாக செயல்பட்ட இந்த அதிகாரிகள் பாதுகாக்கப்படுகிறார்கள் என்பதே உண்மை. இத்தகைய நிலைமை நீடிப்பது நிர்வாகத்தாலும், நீதித் துறையாலும், அரசாங்கத்தாலும் தங்களுக்கு எந்த நியாயமும் கிடைக்காது என்று குடிமக்களை நிராதரவாக நிற்க வைக்கும். ஜனநாயக நாட்டில் இத்தகைய நிலையை அரசாங்கம் எடுத்திருப்பது முற்றிலும் ஏற்கத் தக்கதல்ல.

எனவே, தமிழ்நாடு அரசு முந்தைய திமுக அரசு மேற்கொண்ட நிலையை மறுபரிசீலனைக்கு உட்படுத்தி, 13 பேர் கொலைக்கு காரணமான அனைத்து அதிகாரிகள் மீதும் உரிய துறைவாரியான நடவடிக்கை மற்றும் குற்ற வழக்கு பதிவு செய்து சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், உயிரிழந்தவர்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் ஆணையம் பரிந்துரைத்த இழப்பீட்டுத் தொகையை முழுவதுமாக வழங்கிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது’ எனத் தெரிவித்துள்ளார்.

<div class="paragraphs"><p>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம்</p></div>
“பயங்கரவாத எதிர்ப்பில் இரட்டை நிலைப்பாடு கூடாது” - ஷாங்காய் மாநாட்டில் பிரதமர் மோடி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in