

சிவகாசி: தீபாவளி பண்டிகைக்காகத் தற்காலிக பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்கும் பணிகள் தொடங்கி உள்ளன. அதே வேளையில் உற்பத்தி குறைவு காரணமாகப் பட்டாசு ஆலைகளில் அடக்க விலை 15 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
சிவகாசி பகுதியில் 1,100-க்கும் மேற்பட்ட அனுமதி பெற்ற பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. பேரியம் நைட்ரேட் பயன்படுத்தத் தடை, இணைப்பு வெடிகள் உற்பத்தி செய்யத் தடை உள்ளிட்ட கட்டுப்பாடுகளால் 60 சதவீத வகை பட்டாசுகள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகின்றன.
கடந்த 2 ஆண்டுகளாகப் பட்டாசு உற்பத்தி குறைந்த போதும், விலை அதிகரிப்பால் ரூ.6,000 கோடி அளவுக்கு தீபாவளி விற்பனை நடந்தது. தமிழகத்தில் விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் ஆண்டு முழுவதும் செயல்படும் நிரந்தர பட்டாசு கடைகளுக்கான உரிமம் வழங்கப்படுகிறது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 2,500-க்கும் அதிகமான சில்லறை விற்பனை கடைகளில் ஆடிப் பெருக்கு அன்று பட்டாசு விற்பனை தொடங்கியது. தற்போது தமிழகம் முழுவதும் தீபாவளி விற்பனைக்கான தற்காலிகப் பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்கும் பணி தொடங்கியுள்ளது.
இதனால் வெளிமாவட்ட வியாபாரிகள் மற்றும் பெரு நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு வழங்கவும், தொழில் துறையினர் வாடிக்கையாளர்களுக்கு வழங்கவும் அன்பளிப்பு பெட்டி (கிஃப்ட் பாக்ஸ்) ரக பட்டாசுகளை ஆர்டர் கொடுக்க சிவகாசியில் குவிந்து வருகின்றனர். இதற்கிடையில், கட்டுப்பாடுகள், மூலப்பொருட்களின் விலையேற்றம் போன்றவற்றால் ஆலைகளில் பட்டாசுக்கான அடக்க விலை 15 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இதனால் சில்லறை கடைகளில் பட்டாசு விலை 20 முதல் 25 சதவீதம் உயர வாய்ப்புள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் கூறுகையில், ‘‘மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் பெரும்பாலான பட்டாசு ஆலைகளில் உற்பத்தி நடைபெறவில்லை. இதனால் ஏற்கெனவே ஆர்டர் செய்த பட்டாசுகளைக் கடைகளுக்கு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அடக்க விலை உயர்ந்த நிலையில், லாரி வாடகை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் சில்லறை விற்பனை 25 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. விலை உயர்ந்த போதும், தீபாவளி நெருங்கும் நேரத்தில் மக்கள் விரும்பும் பேன்சி ரகப் பட்டாசுகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது’’ என்றனர்.