

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை சிப்காட் பகுதி 3-ல் செயல்பட்டு வரும் கழிவு பொருட்களை தரம் பிரித்து மறுசுழற்சி செய்யும் தனியார் தொழிற்சாலையில் இன்று பிற்பகலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தொழிற்சாலை வளாகத்தில் புகை மண்டலம் சூழ்ந்ததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் சிப்காட் பகுதி -3 உள்ளது. இந்தப் பகுதியில் வாகனங்கள் மற்றும் இயந்திரங்களின் உதிரிப் பாகங்கள் தயாரிப்பு, ரசாயனப் பொருட்கள் தயாரிப்பு உட்பட பல்வேறு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
இப்பகுதியில் தனியாருக்கு சொந்தமான மறுசுழற்சி செய்யும் தொழிற்சாலை ஒன்றும் இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில், ராணிப்பேட் சுற்றுவட்டார தனியார் தொழிற்சாலைகளின் கழிவுப் பொருட்கள் கொண்டுவரப்பட்டு தரம் பிரித்து, மறு சுழற்சி செய்யப்படுகிறது.
இந்த தொழிற்சாலையில் இன்று பிற்பகல் 3 மணியளவில், கழிவு பொருட்கள் சேகரிக்கப்பட்ட பகுதியில் இருந்து கரும்புகை வரத் தொடங்கியது. ஊழியர்கள் அதனைப் பார்த்து அணைப்பதற்குள், தீ மளமளவென மற்ற இடங்களுக்கு வேகமாக பரவியது.
தொழிற்சாலை வளாகத்தில் எழும்பிய கரும்புகை அப்பகுதியையே சூழ்ந்தது. இது குறித்து தொழிற்சாலை ஊழியர்கள் சிப்காட் தீயணைப்பு மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து சிப்காட், ராணிப்பேட்டை தீயணைப்பு நிலையம் வாகனங்கள் மற்றும் பெல் நிறுவனத்தில் உள்ள தீயணைப்பு வாகனங்கள் வந்தன.
தொடர்ந்து, தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்து குறித்து காரணம் ஏதும் தெரியவில்லை. மேலும், தீயில் எரிந்த பொருட்கள் அனைத்தும் கழிவுப் பொருட்கள் என கூறப்படுகிறது.
முழுமையான விசாரணைக்கு பிறகே தீ உண்டானதற்கு காரணம் மற்றும் கழிவுப் பொருட்களின் சேதம் மதிப்பு குறித்து தெரியவரும் என தீயணைப்புத் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து சிப்காட் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.