

செல்லப் பிராணிகளுக்கு மைக்ரோ சிப் மற்றும் தடுப்பூசி போடுவதற்கான கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், புளியந்தோப்பில் உள்ள நாய்கள் கருத்தடை மையத்தில் வரிசையில் காத்திருந்த பொதுமக்கள். படங்கள்: எஸ்.சத்தியசீலன்
சென்னை: செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெறுவதற்கான அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, வீடு வீடாக ஆய்வு நடத்தி, உரிமம் பெறாத செல்லப் பிராணிகளின் உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி பகுதிகளில் செல்லப் பிராணிகள் வளர்ப்போர், அதை பதிவு செய்துஉரிமம் பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து மாநகராட்சி சார்பில், திருவிக நகர், புளியந்தோப்பு, லாயிட்ஸ் காலனி, நுங்கம்பாக்கம், கண்ணம்மாபேட்டை, மீனம்பாக்கம் ஆகிய இடங்களில் உள்ள செல்லப்பிராணி சிகிச்சைமையங்கள், சோழிங்கநல்லூரில் உள்ள நாய் இனக்கட்டுப்பாட்டு மையம் ஆகிய இடங்களில் கடந்த அக்.8-ம் தேதி முதல் செல்லப் பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
அத்துடன், செல்லப் பிராணிகளுக்கு மைக்ரோசிப் பொருத்துதல், உரிமம் வழங்குதல் ஆகிய பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உரிமம் வழங்குவதற்கான காலக்கெடு டிச.14 வரை நீட்டிக்கபட்டது. அந்த அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்தது.
இதுவரை 1,05,556 செல்லப் பிராணிகளின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு 57,626 பிராணிகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களாக 8 இடங்களில் சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டன. நேற்று ஒரே நாளில் 2,930 செல்லப் பிராணிகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
அவகாசம் முடிந்த நிலையில், இன்றுமுதல் வீடு வீடாக ஆய்வு நடத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. உரிமம் இன்றி செல்லப்பிராணிகளை வைத்திருந்தால், ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கும் வகையில், ஏற்கெனவே மாநகராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதன்படி, உரிமம் பெறாமல் செல்லப் பிராணிகளை வைத்திருப்போருக்கு அபராதம் விதிக்க இருப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.