

அமைச்சர் மரியவில்சன்
சென்னை: மாநில அளவிலான வங்கியாளர் குழுக் கூட்டத்தில், தமிழகத்துக்கான ஆண்டு கடன் திட்டத்தை நிதி அமைச்சர் மரியவில்சன் வெளியிட்டார். இதில் நடப்பு நிதி ஆண்டுக்காக, ஒருங்கிணைந்த கடன் ஒதுக்கீடு ரூ.10.98 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தின் 186-வது மாநில அளவிலான வங்கியாளர் குழு (எஸ்எல்பிசி) கூட்டம் சென்னையில் நடைபெற்றது. தமிழக நிதி அமைச்சர் மரியவில்சன் தலைமை வகித்தார்.
நிதித் துறை செயலர் எம்.ஏ.சித்திக், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் செயல் இயக்குநரும், மாநில வங்கியாளர் குழுத் தலைவருமான தனராஜ், ரிசர்வ் வங்கியின் தலைமை பொது மேலாளர் ராகேஷ் ஸ்ரீவஸ்தவா, நபார்டு வங்கியின் தலைமை பொது மேலாளர் எச்.மனோஜ் உள்ளி்ட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், நடப்பு நிதி ஆண்டுக்கான தமிழகத்தின் ஆண்டு கடன் திட்டத்தை நிதி அமைச்சர் மரியவில்சன் வெளியிட்டார். அனைத்து உற்பத்தி துறைகளுக்கும் போதுமான அளவிலும், சரியான நேரத்திலும் முறைப்படுத்தப்பட்ட நிறுவன ரீதியிலான கடன் கிடைப்பதை உறுதி செய்வது இதன் நோக்கம் ஆகும்.
நடப்பு நிதி ஆண்டுக்காக, அனைத்து வணிக வங்கிகள், பிராந்திய ஊரக வங்கிகள் (RRB) மற்றும் கூட்டுறவு வங்கிகள் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த கடன் ஒதுக்கீடு ரூ.10.98 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இதில் பெரும்பகுதி விவசாயம், சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை மற்றும் அரசின் பிறமுன்னுரிமை துறைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அனைத்து முன்னுரிமை துறைகளுக்கான மொத்த கடன் ரூ.10 லட்சத்து 98 ஆயிரத்து 38 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் மரியவில்சன் பேசும்போது, ‘‘கல்விக் கடன்களுக்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். தகுதியான கல்விக் கடன் விண்ணப்பங்களுக்கு உரிய நேரத்தில் ஒப்புதல் அளித்து, கடன் வழங்குவதை உறுதி செய்யவும், மாணவர்கள் கடன் பெறுவதை எளிதாக்கவும், விழிப்புணர்வை அதிகரிக்கவும் வேண்டும். பொதுமக்களை அரசின் திட்டங்கள் தடங்கல் இன்றி எளிதாக சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்’’ என்றார்.