சென்னை: அரசின் பல்வேறு துறைகளில் நடைபெற்ற பல கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த வீரப்பன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது: அரசின் பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்படும் உள்கட்டமைப்பு ஒப்பந்தங்கள் தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் பல்வேறு தகவல்களை பெற்றதில், போலி ஆவணங்கள் மூலம் குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு முறைகேடாக ஒப்பந்தங்கள் ஒதுக்கப்பட்டதும், இதன்மூலம் அரசுக்கு கோடிக்கணக்கில் நிதி இழப்பு ஏற்பட்டதும் தெரியவந்துள்ளது.
குறிப்பாக, கடந்த 2022-ம் ஆண்டு முதல் சென்னை சிஐடி நகர், முகப்பேர் வீட்டுவசதி வாரிய கட்டுமானப் பணி, சென்னை எண்ணூர் பகுதியில் கொசஸ்தலை ஆற்றின் முகத்துவாரம் தூர்வாரும் பணி என 12-க்கும் மேற்பட்ட அரசின் பல்வேறு துறைகளின் உள்கட்டமைப்பு பணிக்கான ஒப்பந்தங்கள் சில தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
இந்த நிறுவனங்கள் அதிகாரிகளுடன் கூட்டணி அமைத்து, வேறு எந்த நிறுவனத்துக்கும் ஒப்பந்தங்கள் சென்றுவிடாதபடி முறைகேடு செய்துள்ளன. இதுகுறித்து கடந்த 2025 ஆகஸ்டில் நீர்வளம், பொதுப்பணி, லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் எந்தநடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, இது தொடர்பாக விசாரிக்க லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு இந்த மனு மீதான விசாரணை நடந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில், ‘‘போலி ஆவணங்கள், சான்றிதழ்கள் மூலம் பெறப்பட்ட ஒப்பந்தங்களால் அரசுக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது’’ என்று வாதிடப்பட்டது.
அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, ‘‘மனுதாரர் அளித்துள்ள புகார் தொடர்பாக விசாரணை நடத்த தமிழக அரசின் பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர் கடந்த மே 26-ம் தேதி ஒரு குழு அமைத்துள்ளார்.
அந்த குழு இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது’’ என்றார். இதையடுத்து நீதிபதி, ‘‘அந்த குழு 8 வாரத்தில் விசாரணை நடத்தி, அது தொடர்பான விவரங்களை லஞ்ச ஒழிப்புத் துறையிடம் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்.
அதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்’’என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.