

மனுதாக்கல் இன்று தொடங்கும் நிலையில், மதுரை மாநகராட்சி மண்டலம்-2 அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் வாகனங்களை நிறுத்த தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. படம்:ஆர்.அசோக்
சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று காலை 11 மணிக்கு தொடங்குகிறது. மொத்தம் 4 நாட்கள் மட்டுமே அவகாசம் இருப்பதால், முதல் நாளான இன்றே மனுதாக்கல் களைகட்டும் என்று தெரிகிறது. இதையொட்டி, தேர்தல் நடத்தும் அதிகாரிகளின் அலுவலகங்களில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்.23-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இத்தேர்தலில் 5.73 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். பெரும்பாலான கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. இந்த நிலையில், தேர்தல் ஆணையம் ஏற்கெனவே அறிவித்தபடி, தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் இன்று (மார்ச் 30) தொடங்குகிறது.
இதையொட்டி, அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு அலுவலகங்கள் அமைக்கப்பட்டு, தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அலுவலகத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் முழுமையாக சிசிடிவி கேமரா கண்காணிப்பில் கொண்டு வரப்பட்டுள்ளன. அரசியல் கட்சியினர் கூட்டமாக வருவதை தடுக்க பல அடுக்கு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
மனு தாக்கலின்போது, தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் சுற்றளவுக் குள் 3 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். அலுவலகத்துக்குள் வேட்பாளர் உட்பட 5 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. மனுவை வேட்பாளர்கள் இணைய வழியில் (Suvidha Portal) பூர்த்தி செய்யலாம். ஆனால், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மனு தாக்கலின் போது நேரில் மட்டுமே தாக்கல் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
அனைத்து தொகுதிகளிலும் இன்று காலை 11 மணிக்கு வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. ஏப்.6-ம் தேதி வரை மனுதாக்கல் செய்யலாம். தினமும் மாலை 3 மணி வரை மனு தாக்கல் நடைபெறும்.
4 நாட்கள் மட்டுமே அவகாசம்: மார்ச் 31 (மகாவீர் ஜெயந்தி), ஏப்.1 (வங்கி விடுமுறை), ஏப்.3 (புனித வெள்ளி), ஏப்.5 (ஞாயிற்றுக்கிழமை) என 4 நாட்கள் விடுமுறை என்பதால், மீதியுள்ள 4 நாட்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய அவகாசம் உள்ளது. எனவே, முதல் நாளான இன்றே மனு தாக்கல் களைகட்டும் என்று தெரிகிறது.