

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது. புதுச்சேரியில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்.9-ம் தேதி நடக்கிறது.
தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 16-ம் தேதி தொடங்கியது. தேர்தல் இவ்வளவு சீக்கிரமாக அறிவிக்கப்படும் என அரசியல் கட்சிகள் எதிர்பார்க்கவில்லை.
மனுத் தாக்கல் தொடங்கிய நிலையிலும், இண்டியா கூட்டணியிலும், என்டிஏ கூட்டணியிலும் முடிவு ஏற்படாமலேயே இழுபறியாக இருந்தது.
இந்நிலையிலும், என்டிஏ கூட்டணியில் உள்ள முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், திருமுருகன், சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், பேரவை துணைத் தலைவர் ராஜவேலு, திமுக சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் சிவா மற்றும் பாஜக எம்எல்ஏ கல்யாண சுந்தரம், என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏ சந்திர பிரியங்கா உட்பட மாநிலம் முழுவதும் இதுவரை 135 வேட்புமனுக்கள் தாக்கலாகி உள்ளன.
என்டிஏ கூட்டணியில் உள்ள என்.ஆர்.காங்கிரஸ் தரப்பில் முதல்வர் ரங்கசாமி உட்பட 8 பேர் மனுத்தாக்கல் செய்தாலும், என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. லஜக வேட்பாளர்களும் அறிவிக்கப்படவில்லை. பாஜக, அதிமுக வேட்பாளர்கள் மட்டும் அறிவிக்கப்பட்டனர்.
இண்டியா கூட்டணியில் திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது.
இந்தச் சூழலில் இன்று (மார்ச் 23) மதியம் 3 மணியுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவடைகிறது.