

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. செல்வம் அடைக்கலநாதன்
ராமேசுவரம்: இலங்கை தலைமன்னார்- ராமேசுவரம் பயணிகள் கப்பல் சேவையை விரைவில் தொடங்க வேண்டும் என இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கை நாடாளுமன்றத்தில் அவர் பேசியதாவது: இலங்கையின் தலைமன்னார் மற்றும் தமிழ்நாட்டின் ராமேசுவரம் இடையேயான பயணிகள் கப்பல் சேவையைத் தொடங்கும் திட்டம், 2 நாடுகளுக்கிடையேயான பண்பாட்டு, சமூக மற்றும் வர்த்தக உறவுகளை வலுப்படுத்தும் முக்கியமான நடவடிக்கையாகும். இந்த சேவை பிராந்திய இணைப்பை மேம்படுத்தி, சுற்றுலா, வர்த்தகம் மற்றும் மக்கள் இடையிலான உறவுகளை ஊக்குவிக்கும் வகையில் செயல்படும். இந்த கப்பல் சேவையை விரைவில் தொடங்க வேண்டும்.
இந்த பயணிகள் கப்பல் சேவையை தொடங்கும் திட்டம், இலங்கை அரசாங்கத்துக்கு உள்ளதா என்பதை அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து அந்நாட்டு துறைமுகங்கள் துறை அமைச்சர் அநுர கருணாதிலக்க கூறுகையில், இரு நாட்டு பயணிகள் சேவை குறித்து பரிசீலிக்கப்படுகிறது. இதுதொடர்பான முழுமையான விவரங்கள் 2 வாரங்களில் நாடாளுமன்றத்தில் முன் வைக்கப்படும் என்றார்.