விழாக்கோலம் பூண்டது மதுரை மாநகரம் - மீனாட்சி அம்மன் கோயிலில் நாளை குடமுழுக்கு கோலாகலம்

பாதுகாப்பு பணிக்காக 6,500 போலீஸார் குவிப்பு
விழாக்கோலம் பூண்டது மதுரை மாநகரம் - மீனாட்சி அம்மன் கோயிலில் நாளை குடமுழுக்கு கோலாகலம்
Updated on
2 min read

மதுரை: மீனாட்சி அம்மன் கோயிலில் 17 ஆண்டுக்கு பின்பு நாளை குடமுழுக்கு விழா நடைபெறுகிறது. இதை முன்னிட்டு கோயில் நகரமான மதுரை விழாக்கோலம் பூண்டுள்ளது. லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள் என்பதால் 6500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவை நடத்தவதற்கு கடந்த திமுக ஆட்சியில் முடிவு செய்யப்பட்டது. இதையொட்டி 2018-ல் தீ விபத்தில் சேதமடைந்த வீரவசந்தராயர் மண்டபம் ரூ.35 கோடியில் சீரமைக்கப்பட்டு கடந்த ஆக.30-ல் திறந்து வைக்கப்பட்டது. அதன்பின்பு சுமார் 8 ஆண்டு களாக அடைத்து வைக்கப்பட்டிருந்த கிழக்கு கோபுர வாசலும் திறக்கப்பட்டு பக்தர்கள் அவ்வழியாக அனுமதிக்கப்பட்டனர்.

கோயில் நிதி மற்றும் உபயதாரர் நிதியில் குடமுழுக்கை நடத்த ரூ.28 கோடி மதிப்பில் திருப்பணிகள் நடந்து வந்தன. பணிகள் நிறைவடைந்த நிலையில் 17 ஆண்டுகளுக்கு பின்பு செப்.17-ம் தேதி குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதற்காக வடக்காடி வீதியில் யாகசாலை பூஜைகளுக்காக 184 குண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கான பூர்வாங்க பூஜைகள் செப்.6-ம் தேதி விநாயகர் வழிபாட்டுடன் தொடங்கியது. தொடர்ந்து செப்.11-ம் தேதி மாலை முதல்கால யாகசாலை பூஜை தொடங்கியது. வடக்காடி வீதியில் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் சுவாமிக்கு தலா 33 குண்டங்கள், 70 பஞ்சாகினி குண்டங்கள், 42 ஏகாகனி குண்டங்கள், ரிக் கும்பம் 2 உள்பட 184 குண்டங்களில் யாக வேள்விகள் நடைபெற்று வருகின்றன. இதில் சுமார் 350 சிவாச்சாரியார்கள் ஈடுபட்டுள்ளனர்.

மூலவர் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் சுவாமிக்கு மருந்து சாற்றும் வைபவம் நடைபெறுவதால் செப்.11 முதல் 16-ம் தேதி வரை மூலவர் சந்நிதிகள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால், பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி இல்லை. அதே நேரத்தில் யாகசாலை பூஜைகளை பார்க்க பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

செப்.15-ம் தேதி எட்டாம் கால வேள்வியும், அன்று மாலை ஒன்பதாம் கால வேள்வியும் நடைபெற்றது. செப்.16-ம் தேதி காலை 5 மணியளவில் பத்தாம் கால யாக வேள்வி முடிந்து கலசங்கள் புறப்பாடு நடைபெறும். காலை 6 மணிக்குள் பரிவார மூர்த்திகளுக்கு குடமுழுக்கு விழா நடைபெறுகிறது. அன்று மாலை 11-ம் கால யாக வேள்வி நடைபெறும். செப்.17-ம் தேதி காலை 4 மணி முதல் 5.45 மணி வரை 12-ம் கால யாக வேள்வி நடைபெறும். பின்பு கலசங்கள் புறப்பாடாகி காலை 7.40 மணியளவில் மீனாட்சி, சுந்தரேசுவரர் சந்நிதிகளின் தங்க விமானங்கள் மற்றும் ராஜகோபுர கலசங்களுக்கு ஒரே நேரத்தில் குடமுழுக்கு விழா நடைபெறும். இதன்படி 7.55 மணிக்கு மூலவர்கள் மீனாட்சி அம்மனுக்குக்கும், காலை 8.10-க்கு சுந்தரேசுவரர் சுவாமிக்கும் குடமுழுக்கு நடைபெறும். இதை முன்னிட்டு மதுரை மாநகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

இவ்விழாவில் அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ், சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார், உயர்கல்வித் துறை அமைச்சர் பெ.விஸ்வநாதன் ஆகியோர் பங்கேற்கின்றனர். மாலையில் மூலவருக்கு அபிஷேகம் மற்றும் பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடைபெறும். குடமுழுக்கு விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் மதுரை மாநகர காவல்துறை சார்பில் 6,500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

அமைச்சர் தகவல்

இதனிடையே மதுரையில் நேற்று அமைச்சர் ரமேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: குடமுழுக்கு விழாவை முன்னிட்டு அனைத்துத் துறை அலுவலர்களையும் ஒருங்கிணைத்துச் செயல்படக்கூடிய வகையில் கட்டுப்பாட்டு அறை புதுமண்டபத்தில் செயல்பட்டு வருகிறது. குடமுழுக்கைக் காணவரும் பக்தர்களுக்கு மருத்துவ உதவி மையங்கள், முகாம்கள் கோயில் வளாகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள வீதிகளில் தயார் நிலையில் அமைக்கப்பட்டுள்ளன.

அவசர சிகிச்சை தேவைப்படும் பக்தர்களுக்கு 108 அவசர ஊர்திகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. விழாவைப் பக்தர்கள் காண்பதற்கு ஏதுவாக முக்கிய இடங்களில் எல்இடி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. நாளை குடமுழுக்கும், மூலவர் மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேசுவரர் சுவாமிக்கு கலசாபிஷேகமும் நடைபெறவுள்ளன. இவ்வாறு தெரிவித்தார்.

விழாக்கோலம் பூண்டது மதுரை மாநகரம் - மீனாட்சி அம்மன் கோயிலில் நாளை குடமுழுக்கு கோலாகலம்
ஆசிய விளையாட்டு: பதக்க வேட்டைக்கு இந்தியா தயார்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in