

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே ஆர்சுத்திப்பட்டு நெல் சேமிப்பு கிடங்கில், நெல் மூட்டைகள் சரிந்து விழுந்ததில், பெண் கூலித் தொழிலாளர் உயிரிழந்தார். மற்றொரு பெண் கூலித் தொழிலாளர் காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தஞ்சாவூர் அருகே ஆர்சுத்திப்பட்டு கிராமத்தில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்துக்கு சொந்தமான திறந்தவெளி நெல் சேமிப்பு குடோன் உள்ளது. இந்த குடோனில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்படுவது வழக்கம். தற்போது ஏராளமான நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன .
இந்நிலையில், இந்த குடோனில் பணிபுரியும் தற்காலிக ஊழியர்கள் இன்று (ஜூலை 6) பணிபுரிந்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஏராளமான நெல் மூட்டைகள் சரசரவென சரிந்தன. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பணியாளர்கள் வேக வேகமாக ஓட தொடங்கினர். இருந்தாலும் அதே கிராமத்தை சேர்ந்த காசிநாதன் மனைவி சின்னப்பொண்ணு (65), கீழகொருக்கப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சகுந்தலா ஆகியோர் மீது நெல் மூட்டைகள் விழுந்தது.
இதில் சின்னப்பொண்ணு மூச்சு திணறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சகுந்தலாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக சகப் பணியாளர்கள், காயமடைந்த சகுந்தலாவை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து தகவல் அறிந்த தஞ்சாவூர் தாலுகா போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நெல் மூட்டைகள் விழுந்து இறந்த சின்ன பொண்ணுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து சம்பவம் நடந்த இடத்தில் நெல் மூட்டைகள் சரிந்து விழுந்தது எப்படி என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தினர். இது குறித்த புகாரின்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.