

திருச்சி: திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் மண்டப மேற்கூரை நேற்று இடிந்து விழுந்ததில் பெண் பக்தர் உயிரிழந்தார். காயமடைந்த தாய், மகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா கடந்த 4 வாரங்களாக நடைபெற்று வருகிறது. இதில் வாரந்தோறும் ஞாயிறுக்கிழமை அன்று பூச்சொரிதல் விழா விமரிசையாக நடைபெறும்.
அதன்படி, 4-வது வாரமாக பூச்சொரிதல் விழா நேற்று நடைபெற்றது. இதற்காக உள்ளூர், வெளி மாவட்ட பக்தர்கள் நேற்று முன்தினம் இரவே வந்து கோயில் வளாகத்தில் தங்கினர்.
இதில், திருவையாறு, செபாஸ்தியார் கோயில் தெருவைச் சேர்ந்த மோகன் மனைவி நதியா (32), அவரது உறவினர்களான தஞ்சாவூர் மாவட்டம் கள்ளப்பெரம்பூர் மாதாக்கோவில் தெருவைச்சேர்ந்த சண்முகசுந்தரம் மனைவி ரஞ்சனி (35), அவரது மகள் பாபிக் ஷா( 14) ஆகியோரும் கோயிலுக்கு நேற்று முன்தினம் இரவு வந்து கோயில் சந்நிதி வீதியில் உள்ள நுழைவுவாயில் மண்டபத்தில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில், நேற்று அதிகாலை 2 மணி அளவில் மண்டபத்தின் கான்கிரீட் மேற்கூரை சுவர் இடிந்து கீழே உறங்கிக் கொண்டிருந்த நதியா உள்ளிட்ட 3 பேர் மீதும் விழுந்தது. இதில், பலத்தகாயமடைந்த நதியா அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும், பலத்த காயமடைந்த ரஞ்சனி மற்றும் பாபிக் ஷா ஆகியோரை அங்கிருந்த மற்ற பக்தர்கள் மீட்டு, உடனடியாக ஆம்புலன்ஸ் உதவியுடன் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தகவலறிந்த சமயபுரம் காவல் ஆய்வாளர் தண்டபாணி தலைமையிலான போலீஸார், அங்கு விரைந்து வந்து நதியாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
சமயபுரம் கோயில் இணை ஆணையர் சூரியநாராயணன் மற்றும் கோயில் அலுவலர்கள் விரைந்து வந்து மேற்கூரை இடிந்து விழுந்த மண்டப பகுதியை பார்வையிட்டனர்.
இச்சம்பவத்தை தொடர்ந்து, கோயிலின் கிழக்கு நுழைவுவாயில் மண்டபப் பகுதி இரும்பு தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டது. வடக்கு வாசல், தெற்கு வாசல் வழியாக பக்தர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். மேற்கு வாசல் வழியாக பக்தர்கள் வெளியே செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அண்ணாமலை கண்டனம்
இதனிடையே இந்த விவகாரத்தில் அமைச்சர் சேகர்பாபு பதில் சொல்லியே தீர வேண்டும் என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரது எக்ஸ் தள பதிவு:
இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடந்து நான்கு ஆண்டுகள் கூட முழுமை பெறவில்லை. இந்த நிலையில், கோவில் மண்டபத்தின் மேற்கூரை இடிந்து விழுவது என்பது திமுக அரசு, எந்த லட்சணத்தில், ஆலயத் திருப்பணிகளை மேற்கொண்டு வருகிறது என்பதற்கான வெளிப்படையான சான்றாகும்.
திமுக அரசு பக்தர்களின் உயிரை துச்சமாக நினைக்கிறது என்பது இதன்மூலம் தெரியவருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில், இவர்கள் செய்த அனைத்து ஆலயத் திருப்பணிகளையும் ஆய்வு செய்ய வேண்டும்.
இந்த துயர சம்பவத்துக்குப் பின்னணியில் உள்ள அனைவரின் மீதும், கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைச்சர் சேகர்பாபு, பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறியதற்கு பதில் சொல்லியே தீர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.