

ேகாவை வந்த பிரதமரை வரவேற்க அளிக்கப்பட்ட பெயர் பட்டியல். இதில் அண்ணாமலை பெயர் இல்லை.
கோவை: கேரள மாநிலம் பாலக்காட்டில் நடைபெறும் பிரச்சாரத்தில் கலந்து கொள்வதற்காக, நேற்று கோவை விமான நிலையத்துக்கு வந்த பிரதமர் மோடிக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
வரவேற்பாளர் பட்டியலில் பெயர் இல்லாததால் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையால் பங்கேற்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. கேரளா மாநிலத்தில் வரும் 9-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.
தேர்தல் நெருங்குவதைத் தொடர்ந்து அம்மாநிலத்தில் பாஜக தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கேரளாவில் போட்டியிடும் என்டிஏ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி நேற்று பாலக்காட்டில் பிரச்சாரம் செய்தார்.
முன்னதாக இந்த பிரச்சார நிகழ்வில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி புதுடெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு நேற்று மதியம் 2 மணிக்கு கோவை பீளமேட்டில் உள்ள சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தார்.
அங்கிருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் பாலக்காடு புறப்பட்டுச் சென்று பிரச்சாரத்தில் கலந்து கொண்டார். பிரதமர் வருகையையொட்டி கோவை விமான நிலையத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
கோவை விமான நிலையத்துக்கு வந்த பிரதமர் மோடியை, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அதிமுக புறநகர் கோவை வடக்கு மாவட்ட செயலாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார், அமமுக நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான சண்முகவேலு, ஐஜேக தலைவர் பாரிவேந்தர், தமாகா நிர்வாகி ராஜேஸ்வரன் மற்றும் பாஜக நிர்வாகிகள் கனகசபாபதி, ஏ.பி.முருகானந்தம், எஸ்.ஆர்.சேகர், நந்தகுமார், ரமேஷ்குமார், சந்திரசேகர், கருமாரிமுத்து, சதீஷ்குமார் வரவேற்றனர்.
இந்நிலையில் கோவை வந்த பிரதமரை வரவேற்கும் நபர்களின் பெயர் பட்டியல் பாஜகவில் இருந்து வழங்கியதன் அடிப்படையில் காவல்துறையினர் மூலம் சரிபார்க்கப்பட்டு அனுமதி வழங்கப்பட்டது. இதன்படி பட்டியலில் பெயர் இருந்தவர்கள் மட்டுமே விமான நிலையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த பட்டியலில் பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை பெயர் இல்லை என்பது தெரியவந்துள்ளது. இதனால் அவரால் பிரதமர் வரவேற்பு நிகழ்வில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டது.
அதேநேரம் நேற்று அவர் கோவையிலும் இல்லை என்பதாலும் அவர் இந்நிகழ்வில் பங்கேற்க முடியாமல் போனதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.