முல்லை பெரியாற்றில் நீர் திருட்டால் பாசன உரிமை பெற்ற விளை நிலங்கள் பாதிப்பு

கேலிக்கூத்தாகும் நீர் பங்கீட்டு அரசாணைகள்
முல்லை பெரியாற்றில் நீர் திருட்டால் பாசன உரிமை பெற்ற விளை நிலங்கள் பாதிப்பு
Updated on
2 min read

உத்தமபாளையம்: முல்லை பெரியாற்றில் தொடரும் அதிகப்படியான நீர் திருட்டால் பாசன பங்கீட்டு உரிமை பெற்ற ஏராளமான விளைநிலங்கள் பாதிப்படைகின்றன. எனவே, நீர்வளத் துறையினர் சம்பந்தப் பட்டவர்களை கருப்பு பட்டியலில் கொண்டுவந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேனி மாவட்டத்தின் மிக நீளமான ஆறாக முல்லை பெரியாறு உள்ளது. இந்த ஆற்றின் தண்ணீர் பெரியாறு அணையில் இருந்து வெளியேறி, தமிழக தரைப்பகுதியான லோயர் கேம்ப்புக்கு வந்து, அங்கிருந்து சுருளிப்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, காமயகவுண்டன்பட்டி, கோகிலாபுரம், மார்க்கையன்கோட்டை, பாலார்பட்டி, தேனி வழியே வைகை அணையை சென்றடைகிறது.

சுமார் 90 கி.மீ. தொலைவை பல்வேறு ஊர்களின் வழியே இந்த ஆறு கடந்து செல்கிறது. இதனால், கரையின் இரு பக்கமும் விவசாயம் செழிப்பாக உள்ளது.

இந்நிலையில், கரைகளில் இருந்து வெகுதூரம் உள்ள ஊர்களுக்காக ஆற்றில் இருந்து தண்ணீர் திருட்டு தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆற்றின் கிழக்குப் பகுதியில் உள்ள அழகாபுரி, ஓடைப்பட்டி, சீப்பாலக் கோட்டை, அப்பிபட்டி, கன்னிசேர்வைபட்டி உள்ளிட்ட பகுதிகளில் இத்திருட்டு அதிகமாக உள்ளது. வழிநெடுகிலும் ஆற்றின் கரையோரங்களில் இதுபோன்ற நிலை தொடர்கிறது. இதனால் திறந்து விடப்படும் நீருக்கும், வைகை அணையை சென்றடை யும் நீரின் அளவுக்கும் மாறுபாடு இருக்கிறது.

நீர் திருட்டால் ஆண்டு தோறும் பல லட்சம் லிட்டர் நீர் திசை மாறிச் செல்வதால், முறைப்பாசன உரிமை உள்ள இதர விவசாயிகளுக்கு நீர் இழப்பு ஏற்படுகிறது. இதுபோன்ற நிலையைத் தடுக்க நீர்வளத் துறையினர் மின்துறை, வருவாய் மற்றும் காவல் துறையுடன் இணைந்து கூட்டாய்வு செய்து வருகிறது. அவ்வப்போது மின்இணைப்பு துண்டிப்பு, குழாய் அகற்றம் போன்ற மென்மையான நடவடிக்கையால் மீண்டும் மீண்டும் இதுபோன்ற செயல்கள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன.

எனவே, நீர்திருட்டில் ஈடுபடுபவர்களை கருப்புப் பட்டியலில் வைத்து அரசு திட்டங்களைப் பெற முடியாத அளவுக்கு நடவடிக்கைகளை கடுமையாக்க வேண்டும். கண்காணிக்கத் தவறிய நீர்வளத் துறையினர் மீதும் துறைவாரியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் நீர்திருட்டு முற்றிலும் ஒழியும் என்று 5 மாவட்ட பாசன உரிமை விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: முல்லை பெரியாற்று நீரை நம்பி 5 மாவட்டங்களிலும் 2 லட்சத்து 57 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் உள்ளன. அதேபோல், ஒரு கோடி பேருக்கான குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.

ஒருபோகம், இருபோகம், குறுவை பாசனம் என்று பல்வேறு வகையான உணவு உற்பத்திக்கும் பாசன பங்கீடு முறை உள்ளது. இதற்காக, பிரிட்டிஷ் காலத்தில் இருந்தே செப்புப் பட்டயம் மூலம் முறைப் பாசன அளவு குறித்த பதிவுகள் உள்ளன. இந்நிலையில், தொடரும் நீர்திருட்டினால் நீர்பங்கீடு உரிமை பெற்ற நிலங்களுக்கு உரிய அளவு தண்ணீர் சென்ற டையாத நிலை உள்ளது. எனவே, நீர் திருட்டுக்கு தண்டனைகளை கடுமையாக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்

முல்லை பெரியாற்றில் நீர் திருட்டால் பாசன உரிமை பெற்ற விளை நிலங்கள் பாதிப்பு
விவசாயிகளை அலைக்கழிக்கும் நுகர்பொருள் வாணிபக் கழகம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in