

தஞ்சாவூர்: வியாபாரிகளை கட்டுப்படுத்துவதாக நினைத்து, விவசாயிகளை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் அலைக்கழிப்பதால் விவசாயிகள் வேதனையடைந்து வருகின்றனர்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் முப்போகம் விளைவித்த நெல்லை கொள்முதல் செய்ய தமிழக அரசு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அந்தந்த பகுதியில் திறந்து, நெல்கொள்முதல் செய்து வருகிறது.
நிகழாண்டு மேட்டூர் அணையிலிருந்து குறுவை பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படாத நிலையில், டெல்டா மாவட்டங்களில் 2.50 லட்சம் ஏக்கரில் பம்புசெட் மூலம் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டு, தற்போது அறுவடை பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
அறுவடை செய்த நெல்லை செப்.1-ம் தேதி முதல் புதிய விலையில் கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் விடுத்த கோரிக்கையை ஏற்று, கடந்த வாரம் அதற்கான உத்தரவை தமிழக அரசு வழங்கி, கொள்முதல் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நிகழாண்டு சந்தைப் பருவமான 2026 செப்.1 முதல் 2027 ஆக.30 வரையிலான காலக்கட்டத்தில் பல்வேறு நிபந்தனைகளை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் விதித்துள்ளதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
அதாவது, அந்தந்த வட்டார எல்லையில் விளைந்த நெல்லை, அந்தந்த வட்டாரத்தில் உள்ள கொள்முதல் நிலையத்தில் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். கொள்முதல் நிலையங்களில் மாலை 6 மணிக்கு மேல் கொள்முதல் செய்ய முடியாது. ஒரு ஏக்கருக்கு 2,400 கிலோ மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும் போன்ற கெடுபிடிகளால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் பாபநாசம் பகுதியில் வீரமாங்குடி, மணலூர், சோமேஸ்வரபுரம், தேவன்குடி, ஈச்சங்குடி ஆகிய பகுதிகளில் தற்போது அறுவடை மும்முரமாக நடைபெறும் நிலையில், அங்கு ஒருசில இடங்களில் மட்டுமே கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இதனால், அந்த கிராமங்களை ஒட்டியுள்ள திருவையாறு வட்டாரத்தைச் சேர்ந்த ஓலதேவராயன்பேட்டை, பெரமூர் போன்ற பகுதிகளில் உள்ள கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் நெல்லை விற்பனை செய்ய முடியவில்லை.
குறுவை சாகுபடியில் ஒரு சில விவசாயிகளுக்கு மகசூல் ஏக்கருக்கு 2,500 முதல் 2,800 கிலோ வரை கிடைத்துள்ள நிலையில், கூடுதலாக விளைந்த நெல்லை ஒரேநேரத்தில் விற்க முடியாமல் அவதிப்படுகின்றனர். அதேபோல, மின்தடங்கல், ஒரு நாளைக்கு 1,000 மூட்டைகள் வரை கொள்முதல் செய்ய வேண்டும் என்ற மாவட்ட அதிகாரிகளின் நிர்பந்தம் காரணமாக மாலை 6 மணிக்கு மேல், கையடக்க டேபில் பதிவு செய்ய முடியவில்லை.
வியாபாரிகளின் நெல்லை கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்வதை தடுப்பதாக நினைத்து, விவசாயிகளை அலைக்கழிப்பதுடன், அவர்களை வேதனைக்கு உள்ளாக்கி உள்ளது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியது: இந்தாண்டு குறுவை பருவத்தில் நெல்கொள்முதல் தொடக்கம் முதலே பல்வேறு இடையூறுகளை விவசாயிகள் சந்தித்து வருகின்றனர். கடந்த வாரம் கொள்முதல் நிலையங்களில் நெல்லை விற்றவர்களுக்கு இதுவரை பணம் பட்டுவாடா செய்யப்படவில்லை, இதனால், விவசாயிகள் கூலி, இதர செலவுக்கு பணம் இல்லாமல் திண்டாடி வருகின்றனர்.
ஒரு கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கு பல கிராமங்களில் நிலம் இருக்கும். எனவே, வட்டார எல்லையை காரணம் காட்டி கொள்முதல் செய்ய மறுப்பதை உடனடியாக கைவிட வேண்டும். கடந்தாண்டு கொள்முதல் நிலையம் திறக்கப்பட்ட ஊர்களில் இந்தாண்டும் திறந்து கொள்முதலை துரிதப்படுத்துவதுடன், ஏக்கருக்கு 2,400 கிலோவுக்கு மேலும் கொள்முதல் செய்ய வேண்டும் என்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகளிடம் கேட்டபோது: ஒரு ஏக்கருக்கு 2,400 கிலோவுக்கு மேல் மகசூல் செய்தால், அந்த விவசாயியிடம் தனியாக கடிதம் பெற்று, கொள்முதல் செய்ய கூறியுள்ளோம். எல்லை பிரச்சினை, மாலை 6 மணிக்கு மேல் பில் போடுவது குறித்து தலைமை அலுவலகத்துக்கு தெரியப்படுத்தியுள்ளோம். விரைவில் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும். ஆட்சியரிடம் பேசி கூடுதல் நெல்கொள்முதல் நிலையங்கள் விரைவில் திறக்கப்படும் என்றனர்.