

தஞ்சாவூர்: மேகேதாட்டு அணை தொடர்பாக புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற தீர்மானத்துக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து, ஜூன் 27-ல் தமிழக சட்டப்பேரவையில் நகல் எரிப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
மேகேதாட்டு அணை தொடப்பாக புதிய நடுவர்மன்றம் அமைக்க வேண்டும் என்ற தமிழக சட்டப்பேரவையின் தீர்மானத்துக்கு விவசாய அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மேகேதாட்டில் காவிரியின் குறுக்கே அணையை கர்நாடக அரசு கட்டக்கூடாது என தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சியினரும், விவசாயிகள் சங்கங்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில் இந்த கோரிக்கைக்கு வலுசேர்க்கும் விதமாக நேற்று(19-ம் தேதி) தமிழக சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் விஜய், மேகேதாட்டில் கர்நாடக அரசு அணை கட்ட மத்திய அரசு அனுமதிக்க கூடாது என தீர்மானம் கொண்டு வந்ததை அனைத்து அரசியில் கட்சியினரும் ஏற்றுக் கொண்டனர்.
அப்போது எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானத்தில், இந்த அணை தொடர்பாக புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுத்தார். இந்த கோரிக்கை சட்டப்பேரவையில் ஏற்றுக் கொள்ளப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதற்கிடையில் சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்துக்கு, தஞ்சாவூரில் இன்று (ஜூன் 20-ம் தேதி) விவசாய சங்கங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் (சிபிஎம்) பொதுச் செயலாளர் சாமி.நடராஜன் கூறியது: காவிரியில் மேகேதாட்டில் புதிய அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு எவ்வித அனுமதியும் மத்திய அரசு அளிக்கக்கூடாது என்ற சட்டப்பேரவையின் தீர்மானத்தை வரவேற்கிறோம்.
அந்த தீர்மானத்தில் உதயநிதி ஸ்டாலின் கொடுத்த திருத்தம் மேகேதாட்டு பிரச்சினை தொடர்பாக, புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை கொண்டு வரக்கூடாது. இது தொடர்பாக அப்போது ஆட்சி செய்த திமுக அரசு ஏற்கெனவே 4.3.2026 ல் எழுதிய கடித்ததை வெளிப்படையாக வெளியிடாமல், இப்போது திருத்தம் என்ற பெயரில் கொண்டு வந்தது ஏன்.
ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகள் அமலில் இருக்கும் போது, மீண்டும் ஒரு புதிய நடுவர் மன்றம் தேவையில்லாதது. எனவே, சட்டப்பேரவையில் நேற்று இயற்றப்பட்ட நடுவர் மன்றம் தொடர்பான திருத்த தீர்மானத்தை நீக்க வேண்டும் என்றார்.
காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் கூறியது: தமிழக சட்டப்பேரவையில் நேற்று கொண்டு வரப்பட்ட மேகேதாட்டு அணை தொடர்பான தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும். உதயநிதி ஸ்டாலின் இதுதொடர்பாக ஏற்கெனவே திமுக அரசால் 4.3.2026 கடிதம் எழுத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
அதே போல் முதல்வர் விஜய் 26.5.2026 அன்று புதுடெல்லியில் அதிகாரிகளுடன் நான் கலந்து பேசி மேகேதாட்டு அணை தொடர்பாக புதிய நடுவர் மன்றம் கொண்டு வர வேண்டும் என கூறியதையும், அதற்கான தீர்மானத்தையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
திமுக, தவெகவின் இந்த புதிய நடுவர் மன்றம் தொடர்பான தீர்மானங்கள் கர்நாடக அரசுக்கு ஆதரவாக தான் இருக்கும், தமிழக விவசாயிகளுக்கு எந்த பலனும் தராது எனவே, இந்த தீர்மானத்தை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும். இல்லையென்றால் தஞ்சாவூரில் ஜூன் 20-ல் தமிழக சட்டப்பேரவை நகல் எரிப்பு போரட்டம் நடத்தப்படும் என்றார்.