

ஓசூரிலிருந்து மேகேதாட்டு நோக்கி முற்றுகை போராட்டம் நடத்துவதற்காக புறப்பட்டுச் சென்ற பி.ஆர்.பாண்டியன் தலைமையிலான விவசாயிகள் சங்கத்தினர்.
ஓசூர்: மேகேதாட்டு பகுதியில் முற்றுகை போராட்டம் நடத்த ஓசூரிலிருந்து பேரணியாக புறப்பட்ட விவசாயிகளை மாநில எல்லையில் போலீஸார் தடுத்து நிறுத்தினர். மேகேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.ஆர். பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.
கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்டும் நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும். கர்நாடக அரசு தமிழகத்துக்கு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி மாதாந்திர நீர் பங்கீட்டை வழங்க வேண்டும். ராசிமணலில் அணை கட்ட அனுமதி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மேகேதாட்டு பகுதியில் முற்றுகை போராட்டம் நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதன்படி பி.ஆர்.பாண்டியன் தலைமையில் 150-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தஞ்சையிலிருந்து வாகன பேரணியாக ஓசூருக்கு நேற்று வந்தனர்.தொடர்ந்து, மேகேதாட்டு பகுதியில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட ஓசூர் மூக்காண்டப்பள்ளியிலிருந்து பேரணியாக புறப்பட்டனர். தமிழக எல்லையான ஜுஜுவாடியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த எஸ்பி தங்கதுரை தலைமையிலான போலீஸார், விவசாயிகளைத் தடுத்து நிறுத்தினர்.
இதுதொடர்பாக பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது: மேகேதாட்டு அணைக்கான வரைவுத்திட்ட அறிக்கையைத் தயாரிக்க கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. எனினும், தமிழகத்தின் அனுமதியின்றி அணை கட்டமுடியாது என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
ஆனால், கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் மேகேதாட்டுவில் அணை கட்டப்போவதாகச் சவால் விடுகிறார். இதற்கு அம்மாநில விவசாயிகளே எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். எனவே, தமிழக முதல்வர் அனைத்துக்கட்சி கூட்டத்தைக் கூட்டி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு இதை தடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதனிடையே, கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.