

தஞ்சாவூர்: மேகேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக மத்திய அரசையும், உச்ச நீதிமன்றத்தையும், கர்நாடக அரசையும் கண்டித்து தஞ்சாவூரில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் இன்று காலை ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட 100 விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். தஞ்சாவூர் ரயில் நிலையத்துக்கு திருச்சியில் இருந்து சென்னை செல்லும் சோழன் விரைவு ரயில் வந்தபோது, அந்த ரயிலை தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பழனியப்பன் தலைமையில் விவசாயிகள் மறித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர் .
அப்போது மேகேதாட்டு அணையை கர்நாடகா அரசு கட்டுவதற்கு விரிவான திட்ட அறிக்கையை காவிரி மேலாண்மை ஆணையத்தில் தாக்கல் செய்யலாம் என அண்மையில் உச்ச நீதிமன்றம் உத்தரவு வழங்கியிருந்தது.
இந்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தியும், கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே அணை கட்டக்கூடாது என்பதை வலியுறுத்தியும், மத்திய அரசு ராசி மணலில் அணைகட்ட உரிய அனுமதியை வழங்க வேண்டும் எனவும், நெல்லின் ஈரப்பதம் 22 சதவீதம் அளவுக்கு நிரந்தர கொள்முதல் உத்தரவை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தி போராட்டத்தில் விவசாயிகள் முழக்கங்களை எழுப்பினர்.
இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீஸார் கைது செய்தனர். இந்த போராட்டத்தின் காரணமாக திருச்சி - சென்னை சோழன் விரைவு ரயில் ஐந்து நிமிடம் கால தாமதமாக புறப்பட்டுச் சென்றது.