திருப்பரங்குன்றம் விவகாரம்: டிச.7-ல் இந்து முன்னணி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

திருப்பரங்குன்றம் விவகாரம்: டிச.7-ல் இந்து முன்னணி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!
Updated on
1 min read

திருப்பூர்: திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து வரும் 7-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக இந்து முன்னணி அறிவித்துள்ளது.

இந்து முன்னணி மாநிலத்தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணீயம் திருப்பூரில் இன்று செய்தியாளரிகளிடம் பேசியதாவது: கடந்த 2 நாட்களாக தமிழக அரசு மக்களின் பக்தியை அவமதித்து வருவதைக் கண்டிக்கிறோம். உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும் அதனை சிறிதுகூட மதிக்காமல் அரசியல் சாசனத்துக்கு எதிராக காவல்துறை செயல்பட்டு வருகிறது. திமுகவின் இந்து விரோத நடவடிக்கைகளை திசை திருப்ப பல்வேறு தில்லு, முல்லு வேலைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

காவல்துறை நீதிமன்ற உத்தரவை அனுமதிக்காமல் முட்டுக்கட்டை போட்டு நடந்து கொண்டது கடமை தவறிய நடவடிக்கை. 1996-ம் ஆண்டு உயர் நீதிமன்றம் திருப்பரங்குன்றம் மலைமீது கோயில் நிர்வாகம் தீபம் ஏற்ற தீர்ப்பு வழங்கியது. 2014-ம் ஆண்டு நீதிமன்றம் மலை மீது எங்கும் தீபம் ஏற்றலாம். அதனை கோயில் நிர்வாகம் செய்யலாம் என்று கூறியது. 2015-ம் ஆண்டு தர்கா நிர்வாகம் மலையில் தீபம் ஏற்ற ஆட்சேபனை இல்லை என நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது.

கடந்த 30 ஆண்டுகளாக நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தாத கோயில் நிர்வாகம் மற்றும் இந்து சமய அறநிலையத் துறையை எதிர்த்து தான் இப்போது வழக்கு நடந்து அதில் தீர்ப்பு கூறப்பட்டுள்ளது.

நீதிமன்ற விஷயத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தவறான தகவலைச் சொல்கிறார். மற்ற மத பண்டிகைகளுக்கு வாழ்த்துச் சொல்லும் திமுக அரசு, விநாயகர் சதுர்த்திக்கு, தீபாவளிக்கு வாழ்த்து சொல்வதில்லை. மதச்சார்பின்மை என்று சொல்லிக்கொண்டு திமுக வேடம் போடுகிறது.

நாங்கள் மதக்கலவரத்தை தூண்டவில்லை. அங்கு எழுந்த சலசலப்புக்கும் போலீஸார் தான் காரணம். தமிழ்நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கு மிக மோசமாக உள்ளது. அதனை மறைக்கவே, திருப்பரங்குன்றத்தை திமுக அரசு கையில் எடுத்துள்ளது.

திமுகவின் மக்கள் விரோத, சட்டவிரோத செயல்பாட்டை கண்டித்தும் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வலியுறுத்தியும் வரும் 7-ம் தேதி பக்தர்களை இணைந்து மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம், அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறுகிறது. மதுரையின் வளர்ச்சியை யாரும் தடுக்கவில்லை. பல கோயில்களில் ஊழல்கள் நடந்துள்ளது. அதன்மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார். இதில் மாநில செயலாளர் கிஷோர்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.  

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in