

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மூலைக்கரைப்பட்டியில் கொலை செய்யப்பட்ட விவசாயி உடலை வாங்க மறுத்து 8-வது நாளாக அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அவரது மகளை தற்கொலைக்கு தூண்டியதாக 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். மூலைக்கரைப்பட்டி அருகே வடக்கு நெல்லையப்பபுரத்தை சேர்ந்தவர் விவசாயி ஆறுமுகம் (53). கடந்த 17-ம் தேதி வயலுக்குச் செல்லும் வழியில் கொலை செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக, மூன்ற டைப்பு போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இடப்பிரச்சினையில் அதே ஊரைச் சேர்ந்த சிலருக்கு, ஆறுமுகத்துடன் முன்விரோதம் இருந்ததாகவும், அதன் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை நடத்தினர்.
இதுதொடர்பாக, 3 பேரை பிடித்து போலீஸார் விசாரித்து வருகிறார்கள். இதனிடையே, ஆறுமுகத்தின் மகள் பேபிகனி (23) கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.
இதன் தொடர்ச்சியாக, ஆறுமுகம் கொலையில் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க வலியுறுத்தி தந்தை, மகள் ஆகியோரின் உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் நேற்று 8-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பேபிகனி எழுதியிருந்த கடிதத்தின் அடிப்படையில், அவரை தற்கொலைக்கு தூண்டியதாக, நெல்லையப்பபுரத்தைச் சேர்ந்த சூசைமுத்து, செல்வகுமார், ரமேஷ் ஆகிய 3 பேரையும் போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.