

சென்னை: தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி வெளியிட்ட அறிக்கை: மத்திய அரசு 2026-27 கரீப் பருவத்துக்கு 14 வேளாண் உற்பத்தி பயிர்களுக்கு அறிவித்துள்ள குறைந்தபட்ச ஆதரவு விலையானது வழக்கம் போல் விவசாயிகளை ஏமாற்றும் செயலாகவே உள்ளது.
கடந்த 16 ஆண்டுகளாக போராடிவரும் விவசாயிகளின் அடிப்படை கோரிக்கையான, வேளாண் ஆணையத் தலைவர் எம்.எஸ்.சுவாமிநாதனின் பரிந்துரையான ‘சி 2 + 50’ (சாகுபடி செலவுடன் 50 சதவீத லாபம்) என்ற முறையிலான விலை நிர்ணயத்தை இந்த முறையும் பாஜக அரசு அறிவிக்கவில்லை.
மாறாக, ‘சி 1 + 50’ என்ற முறையை அறிவித்துவிட்டு, அதுதான் உண்மையான பரிந்துரை என்று விவசாயிகளை வஞ்சிப்பது கண்டிக்கத்தக்கது. கடந்த 2004-14 வரையிலான 10 ஆண்டுகளில் 4,590 லட்சம் டன்களாக இருந்த கொள்முதல், 2014-26 காலகட்டத்தில் 8,418 லட்சம் டன்களாக உயர்ந்துள்ளது.
இச்சூழலில், அதற்கான உரிய விலை உயர்வை வழங்காமல், நெல் குவிண்டாலுக்கு வெறும் ரூ.72 மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது.
இதன் மூலம், சாதாரண ரக நெல் குவிண்டாலுக்கு ரூ.2,441 ஆகவும், சன்ன ரக நெல் ரூ.2,461 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
வேளாண் ஆணையத்தின் பரிந்துரைப்படி, அனைத்து விளைபொருட்களுக்கும் ‘சி 2 + 50’ என்ற அடிப்படையில் விலையை மறுஆய்வு செய்து அறிவிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.