

கரூர்: கரூர் மாவட்டம் கடவூர் அருகே விவசாயி மீது மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த விவசாயி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கரூர் மாவட்டம் கடவூர் வட்டம் சேவாப்பூரை அடுத்த வளையபட்டியைச் சேர்ந்தவர் முருகன். இவர் மகன் கருணைகிரி (48). விவசாயி. இவர் நேற்றிரவு 9.45 மணிக்கு அவரது களத்து வீட்டுக்கு செல்லும்போது அடையாளம் தெரியாத நபர் நாட்டு துப்பாக்கியால் சுட்டத்தில் இடுப்பு, முதுகில் 10 பால்ரஸ் குண்டுகள் பாய்ந்து காயமடைந்தார்.
காயமடைந்த கருணைகிரியை அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து கரூர் மாவட்டம் பாலவிடுதி போலீஸார் வழக்குப் பதிவு செய்து சந்தேகத்தின் பேரில் அப்பகுதியைச் சேர்ந்த சிலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.