ஊட்டி அருகே வனவிலங்கு தாக்கி விவசாயி உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

உயிரிழந்த சபுஷ்தாள் குட்டன்

உயிரிழந்த சபுஷ்தாள் குட்டன்

Updated on
1 min read

ஊட்டி: ஊட்டி சூட்டிங் மட்டம் அருகே சின்ன காடிமந்து பகுதியில் புலி தாக்கி ஒருவர் உயிரிழந்த நிலையில், உடலை மீட்டு வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, வனத்தறையினரை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் வன விலங்குகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. காட்டு யானை, புலி, சிறுத்தை, கரடி மற்றும் காட்டு மாடுகள் அதிகளவு பெருகிவிட்டன. இவைகள் மக்கள் வாழும் பகுதிக்குள் உணவு தேடி வரும் போது அடிக்கடி மனித விலங்கு மோதல் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது.

இந்நிலையில், இன்று காலை ஊட்டி சூட்டிங் மட்டம் அருகே உள்ள சின்ன காடிமந்து பகுதியில், காட்டுப் பகுதிக்குள், ஒருவரது சடலம் கிடைந்துள்ளது. விசாரணையில், இறந்தவர் தோடர் இனத்தைச் சேர்ந்த சபுஷ்தாள் குட்டன் (51) என தெரிய வந்தது.

உடலைக் கண்ட பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறை அதிகாரிகள், உடலை மீட்டு முதற்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர்.

முதற்கட்ட தகவல்களின் அடிப்படையில், விவசாயியான அந்த நபர் காட்டுப் பகுதிக்குள் சென்ற போது புலி தாக்கியிருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும், மரணம் குறித்த துல்லியமான காரணம் பிரேத பரிசோதனை அறிக்கைக்குப் பிறகே உறுதி செய்யப்படும் என வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் காரணமாக, அப்பகுதி மக்களிடையே அச்சம் நிலவி வருகிறது.

இதையடுத்து, காட்டு விலங்குகளின் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் பொதுமக்கள் தேவையின்றி செல்ல வேண்டாம் என்றும், இரவு நேரங்களில் தனியாக நடமாட வேண்டாம் எனவும் வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அடிக்கடி புலி அல்லது வன விலங்குகள் தாக்கி பொது மக்கள் மற்றும் பழங்குடியின மக்கள் உயிரிழப்பது அதிகரித்துள்ள நிலையில் இதனை கண்டித்து அப்பகுதி மக்கள் ஊட்டி - கூடலூர் சாலையில் ஏழாவது மைல் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், ஊட்டி-கூடலூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனால் பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். போராட்டம் காரணமாக அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து தடைப்பட்டது.

<div class="paragraphs"><p>உயிரிழந்த&nbsp;சபுஷ்தாள் குட்டன்</p></div>
தொகுதிப் பங்கீடு: திமுகவுடன் பேச்சு நடத்த குழு அமைத்தது இ.கம்யூனிஸ்ட்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in