

ஈரோடு: கோபி அருகே ஈரோடு ஆட்சியரின் கார் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற விவசாயி உயிரிழந்தார்.
ஈரோடு மாவட்டம், வெள்ளாங்கோயில் பகுதியைச் சேர்ந்த விவசாயி சண்முகம் (52). இவர் தனது ஓட்டுநர் உரிமத்தைப் புதுப்பிப்பதற்காக நேற்று கோபிசெட்டிபாளையம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்குச் சென்றார். அங்கு பணிகளை முடித்துவிட்டு, தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
வெள்ளாளபாளையம் பிரிவு அருகே சாலையைக் கடக்க முயன்றபோது, கோபிசெட்டிபாளையத்திலிருந்து ஈரோடு நோக்கிச் சென்ற ஈரோடு ஆட்சியர் கந்தசாமியின் அரசு வாகனம் எதிர்பாராதவிதமாக சண்முகத்தின் இருசக்கர வாகனம் மீது மோதியது.
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட சண்முகம் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதுகுறித்து கோபி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, ஆட்சியரின் வாகன ஓட்டுநர் வினோத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.