

சென்னை: மெஸ்ஸியை பார்க்க கொல்கத்தா சென்ற ரசிகர்கள், உயிர் பிழைத்தால் போதும் என்று சென்னை திரும்பியதாக வேதனை தெரிவித்தனர்.
கால்பந்து விளையாட்டின் ஜாம்பவான் மெஸ்ஸி 3 நாட்கள் பயணமாக இந்தியா வந்துள்ளார். முதல் நாளான சனிக்கிழமை கொல்கத்தா சால்ட் லேக் மைதானத்தில், மெஸ்ஸி கலந்து கொள்ளும் நிகழ்ச்சி நடந்தது. தமிழகத்தைச் சேர்ந்த ரசிகர்களும் கொல்கத்தாவுக்கு மெஸ்ஸியை பார்ப்பதற்காக சென்றிருந்தனர்.
இந்நிலையில், மைதானத்தில் சிறிது நேரமே இருந்த மெஸ்ஸி உடனடியாக அங்கிருந்து புறப்பட்டுச் சென்று விட்டதால் ரசிகர்கள் ஆத்திரமடைந்து வன்முறையில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையில் இருந்து கொல்கத்தாவுக்கு சென்ற ரசிகர்கள் விமானம் மூலம் சனிக்கிழமை இரவு சென்னை திரும்பினர். அவர்கள் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மெஸ்ஸியை சூழ்ந்து கொண்ட அரசியல்வாதிகள், அவரை ரசிகர் பக்கமே வரவிடவில்லை இதனால் அவர் புறப்பட்டுச் சென்று விட்டார்.
சென்னையில் இருந்து ரூ.25 ஆயிரம் வரை செலவு செய்து கொல்கத்தா சென்றோம். அரசியல் பிரமுகர்கள்தான் அவரை சூழ்ந்து கொண்டு புகைப்படம் எடுக்க முயற்சித்துக் கொண்டிருந்தனர்.
மெஸ்ஸி வாகனம் மூலமாக ரசிகர்களுக்கு அருகில் வருவார், இளம் கால்பந்து வீரர்களுடன் விளையாடுவார் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அது எதுவும் நடக்காமல் 15 நிமிடத்தில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டதால் காவல் துறையினர் அடித்து விரட்டத் தொடங்கினர்.
அங்கிருந்து உயிர் பிழைத்தால் போதும் என நாங்கள் புறப்பட்டு வந்து விட்டோம். மொத்தத்தில் அவரைப் பார்க்கச் சென்ற எங்களுக்கு ஏமாற்றம்தான் கிடைத்தது. இவ்வாறு ரசிகர்கள் தெரிவித்தனர்.