

சென்னை: உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின்போது வழக்கறிஞர்கள் மீது திடீரென கழன்று விழுந்த ஃபால்ஸ்-சீலிங் அட்டையால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா நேற்று வழக்கம்போல வழக்குகளை விசாரித்துக் கொண்டிருந்தார். குற்றவியல் வழக்குகளை அவர் விசாரித்து வருவதால் போலீஸார், வழக்கறிஞர்கள், மனுதாரர்கள் என கூட்டம் நிரம்பி வழிந்தது.
இந்நிலையில் நேற்று பிற்பகலில் அவரது நீதிமன் றத்தில் மேற்கூரையில் மழைநீர் கசிந்து திடீரென ஃபால்ஸ்சீலிங் அட்டை ஒன்று கழன்று வழக்கறிஞர்கள், பார்வையாளர்கள் இருந்த பகுதியில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அதையடுத்து, யாருக்காவது அடிபட்டுள்ளதா என நீதிபதி கேள்வி எழுப்பினார். யாருக்கும் அடிபடவில்லை என வழக்கறிஞர்கள் தெரிவித்ததால் நீதிமன்ற ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு அந்த அட்டை அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. அப்போது நீதிபதி, வழக்கறிஞர்களை பார்த்து நீங்கள் நல்ல வழக்கறிஞர்கள் என்பதால் உங்களுக்கு அடிபடவில்லை என்றதும் சிரிப்பலை எழுந்தது.