பெட்ரோல் பங்க் தொடங்க போலி என்ஓசி மோசடி வழக்கு: சிபிசிஐடி கூடுதல் டிஜிபி பிப்.10-ல் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவு

பெட்ரோல் பங்க் தொடங்க போலி என்ஓசி மோசடி வழக்கு: சிபிசிஐடி கூடுதல் டிஜிபி  பிப்.10-ல் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவு
Updated on
1 min read

சென்னை: பெட்ரோல் பங்க் தொடங்க போலி தடையில்லா சான்று வழங்கி மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், சிபிசிஐடி கூடுதல் டிஜிபி, பிப்.10-ம் தேதி நேரில் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வி.பி.ஆர்.மேனன் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘பெட்ரோல் பங்க் தொடங்க போலியாக தடையில்லா சான்றுகளை தயாரித்து கொடுத்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் பெட்ரோல் பங்க்குகள் தொடங்க எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து உரிமங்கள் பெறப்பட்டுள்ளன.

அதைத்தொடர்ந்து, இந்த மோசடி குறித்து உயர் நீதிமன்ற உத்தரவுப்படி சிபிசிஐடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் 4 பேர் மீது மட்டும் போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். ஆனால் இந்த மோசடிக்கு மூளையாகச் செயல்பட்டவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. எனவே இந்த மோசடி விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’’ எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.வஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, போலீஸ் தரப்பில் ‘‘இந்த மோசடி வழக்கில் 4 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை போலீஸார் நேர்மையாக விசாரி்த்துள்ளனர்’’ என தெரிவிக்கப்பட்டது.

பெட்ரோலியத் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.டி.பாலாஜி ஆஜராகி, இதுதொடர்பாக பெட்ரோலியத் துறை தரப்பிலும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார். மனுதாரர் தரப்பில் இந்த வழக்கில் உண்மை குற்றவாளிகளை போலீஸார் காப்பாற்றுகின்றனர், என வாதிடப்பட்டது.

நீதிபதிகள் எச்சரிக்கை: அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கை தமிழக போலீஸா்ர் சரியாக விசாரிக்கவில்லை எனில் சிபிஐ விசாரணைக்கு மாற்றுவோம், என எச்சரித்தனர். பின்னர், ‘‘இந்த வழக்கை சிறப்பு புலனாய்வு அமைப்புக்கு மாற்றலாமா என்பது குறித்து விளக்கமளிக்கும் வகையில் சிபிசிஐடி கூடுதல் டிஜிபி, பிப்.10 அன்று நேரில் ஆஜராக வேண்டும்’’ என உத்தரவிட்டுள்ளனர்.

பெட்ரோல் பங்க் தொடங்க போலி என்ஓசி மோசடி வழக்கு: சிபிசிஐடி கூடுதல் டிஜிபி  பிப்.10-ல் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவு
“தற்காலிக ஊழியர்களை எந்த அரசும் பணி நிரந்தரம் செய்ய முடியாது” - அமைச்சர் மா.சுப்பிரமணியன் திட்டவட்டம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in