

சென்னை: ‘உண்மைக்கு விளம்பரங்களோ, விளக்கங்களோ தேவையில்லை. ஆனால் இங்கே ஷூட்டிங் வீடியோ வெளியாகிறது என்றால், போலி பிம்பம் உடைந்தது உண்மையாகிறது’ என திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் வீடியோ பதிவு குறித்து தவெக விமர்சித்துள்ளது.
மிசா விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் முதல்வர் விஜய், அமைச்சர் நிர்மல் குமார் ஆகியோர் பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை உருவாக்கியுள்ளது. இதற்கு எதிர்வினையாற்றும் வகையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியிட்டார்.
அதற்கு பதிலளித்த தவெக ஐடி விங்க், ‘பல ஆண்டுகளாகக் கட்டமைக்கப்பட்ட ‘சிறை சென்ற தியாகி’ என்ற போலி பிம்பம் உடைந்ததில் பதற்றம் பற்றிக்கொண்டதோ?
எதை உலகறியக் கூடாது என்று கருணாநிதி முதல் உதயநிதி வரை கட்டி அடைகாத்தார்களோ, அது அம்பலமானதில் அச்சம் அதிகமாகியிருக்கிறது. அத்தனை நீளமாகப் பேசியும் தடுப்புக் காவல் நகல் (detention copy) பற்றி மட்டும் மூச்சுவிடவில்லை.
உண்மைக்கு விளம்பரங்களோ, விளக்கங்களோ தேவையில்லை. ஆனால் இங்கே ஷூட்டிங் வீடியோ வெளியாகிறது என்றால், போலி பிம்பம் உடைந்தது உண்மையாகிறது. பல கட்-கள், உணர்வற்ற பேச்சு, மீண்டும் உண்மைக்கு மாறான ஒன்றை நம்ப வைக்க முயலும் படுதோல்வி முயற்சியாகவே தெரிகின்றன.
கட்டுமரக் கதைகளாலும் கட்டுக்கதைகளாலும் கட்டமைக்கப்பட்ட பொய்ப் பிம்பம், மெய்யைத் தாக்குப் பிடிக்காது என்பதை நிரூபித்திருக்கிறது இன்று வெளியான பொய் போராளியின் வீடியோ’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட வீடியோ பதிவில், “அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தில் நடந்த சில சர்ச்சைகள், தமிழ் மக்களுக்கும், நம்முடைய கட்சியினருக்கும் கோபத்தையும் அதிருப்தியையும் உண்டாக்கியிருப்பதை நான் உணர்கிறேன். அதுவும், இந்த சர்ச்சையில் முக்கியமாக என்னுடைய சிறை வரலாறும் இருப்பதால், நான் அதைப் பற்றி கொஞ்சம் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
தம்பி விஜய், நீங்கள் சொன்னது உண்மைதான்... பொய் எல்லாம் இல்லை. எமர்ஜென்சி காலத்தில், அதை எதிர்த்து முன்னாள் முதல்வர் கருணாநிதி, மெரினா கடற்கரையில் மிகப்பெரிய கூட்டத்தைக் கூட்டி, மிசா சட்டத்தைக் கடுமையாக விமர்சித்ததைத் தொடர்ந்து, அப்போதிருந்த ஒன்றிய அரசாங்கம் 30-01-1976 அன்று திமுக ஆட்சியைக் கலைத்தார்கள்.
ஆட்சியைக் கலைத்த அடுத்த நொடி, மிசா சட்டத்தில் என்னைக் கைது செய்வதற்காகக் கோபாலபுரம் வீட்டிற்குக் காவல் துறையினர் வந்தார்கள். அன்றைக்கு நான் வீட்டில் இல்லை.
“பையன் பிரச்சாரத்திற்குச் சென்றிருக்கிறான், நாளைக்கு வந்துவிடுவான். வந்ததும் நானே தொலைபேசியில் அழைக்கிறேன், வந்து கைது செய்து கொள்ளுங்கள்” என்று முன்னாள் முதல்வர் கருணாநிதி சொல்லி அனுப்பிவிட்டார். அடுத்த நாள் நான் வந்ததும் அவரே காவல் துறையினரை வரச்சொல்லி, கைது செய்யச் சொல்லிவிட்டார்.
சிறையில் எனக்குப் பல கொடுமைகள் நடந்தன. எங்களைக் கொண்டுபோய் அடைத்ததே தொழுநோயாளிகள் இருக்கும் இடத்தில்தான். 10 பேரை ஒரு சிறிய அறைக்குள் அடைத்து வைத்தார்கள். அந்த அறைக்குள்ளேயே ஒரு பானையில்தான் அத்தனை பேரும் சிறுநீர் கழிக்க வேண்டும். அந்த இடமே மிகவும் துர்நாற்றமாக இருக்கும். அங்கேதான் நாங்கள் தூங்க வேண்டும்.
இரவில் தூங்க விடாமல் காவல் துறையினர் லத்தியால் அடிப்பார்கள், பூட்ஸ் காலால் மிதிப்பார்கள். இன்னொரு பக்கம் ஆயுள் தண்டனைக் கைதிகளை வைத்து வேறு எங்களைக் கொடூரமாக அடிப்பார்கள். அவர்கள் அடித்ததில் என் கூட இருந்த அருமை அண்ணன் நாடாளுமன்ற உறுப்பினர் சிட்டி பாபு சிறையிலேயே இறந்துபோனார்.
அவர்கள் அடித்ததில் என் தாடை எலும்பெல்லாம் உடைந்தது. நீங்கள் கூட இப்படி கைவைத்துத் தாடையைக் காண்பித்தீர்கள் அல்லவா? அது சரிதான். இன்றைக்கும் நான் அடிவாங்கிய தழும்புகள் எனக்கு இருக்கின்றன, நான் இல்லை என்று சொல்லவில்லை.
பொது வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு, முக்கியமாகத் தமிழர்களுக்காகவும், தமிழ்நாட்டிற்காகவும் போராடுகிறவர்கள் நிறைய பேருக்கு இதுபோன்ற அடக்குமுறைகள் நடந்திருக்கின்றன. போராளிகள் எல்லாம் இதைத் தாண்டித்தான் வந்திருக்கிறோம். எதிர்த்துப் போராடுவதும், அதன் விளைவுகளைச் சந்திப்பதும் எங்களுக்கு ஒன்றும் புதிது இல்லை.
யார் என்ன கொச்சைப்படுத்தினாலும் வரலாற்றை மாற்ற முடியாது. அது காலத்திற்கும் அப்படியேதான் இருக்கும். சந்தேகம் என்றால் நீங்கள் சட்டமன்றத்தில் ஒரு நூலகம் இருக்கிறது என்று சொன்னீர்கள் அல்லவா? அங்கே அனைத்து ஆவணங்களும் இருக்கும். அங்கே சென்று என்னுடைய போராட்ட வரலாற்றை நீங்கள் படித்துப் பாருங்கள். உண்மை என்னவென்று புரியும்.
நீங்கள் முதலமைச்சரானதும் என்னைச் சந்திக்க என் வீட்டிற்கு வந்தீர்கள். அப்போது நான் உங்கள் கரம் பிடித்து வரவேற்றேன். அப்போது நாம் பேசும்போது நீங்கள் என்னிடம்: “தேர்தல் பிரச்சாரத்தில் உங்களை மிகவும் விமர்சித்துப் பேசிவிட்டேன், I am sorry Sir” என்று சொன்னீர்கள்.
அதற்கு நான்: “பரவாயில்லை Brother, அதையெல்லாம் நான் மனதில் வைத்துக் கொள்ளவில்லை. நீங்கள் இப்போது ஒரு மாநிலத்தின் முதலமைச்சர், இனி யாரைப் பற்றிப் பேசும்போதும் அந்தக் கண்ணியத்தோடு பேசுங்கள்” என்று சொன்னேன். அதையெல்லாம் நீங்கள் மறந்துவிட்டீர்கள் போல.
திரும்பவும் சொல்கிறேன்... ஒரு முதலமைச்சருக்கான கண்ணியத்தோடு உங்களுடைய வார்த்தைகளும் உடல்மொழியும் இருக்க வேண்டும். நாம்தான் மக்களுக்கு முன்னுதாரணம், அதை மறந்துவிடாதீர்கள். நீங்கள் வகிக்கும் பெரிய பொறுப்பை உணர்ந்து நீங்கள் செயல்பட வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.