உதயநிதி ஸ்டாலின் | கோப்புப் படம்
சென்னை: “காவல்துறையிடம் பாதுகாப்பு கேட்டால் கொலை செய்யப்படுவார்கள் என்ற புதிய வரலாற்றை தவெக ஆட்சியாளர்கள் உருவாக்கி இருக்கின்றனர். காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வரை காவல்துறையினரே வெற்று முதல்வராக நினைக்கிறார்களா?” என உதயநிதி ஸ்டாலின் வினவியுள்ளார்.
திமுக இளைஞரணி செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக ஊடக பதிவில், “தலைநகர் சென்னையில் மீண்டும் ஒரு கொடூர கொலை அரங்கேறி இருப்பது கடும் அதிர்ச்சி அளிக்கிறது.
‘கடன் தொல்லை கொடுக்கிறார்கள்’ என பாதுகாப்பு கேட்ட பிரதீப்ராஜ் எனும் இளைஞரை, ‘உயிரோடு இருக்க மாட்டடாய்... பொய் வழக்குப் போட்டு உள்ள தள்ளிவிடுவேன்’ என்று திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் மிரட்டியதாக சம்பந்தப்பட்ட இளைஞரே நேற்று முன் தினம் வீடியோ வெளியிட்ட நிலையில், நேற்று அவர் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்.
‘முதல்வர் கிட்ட வேண்டுமானாலும் போய் சொல்லு. என்னை ஒன்றும் செய்ய முடியாது’ என்று திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் சொன்னதாக கொலையாவதற்கு ஒரு நாள் முன்பு பிரதீப்ராஜ் கூறியுள்ளார்.
காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வரை காவல்துறையினரே வெற்று முதல்வராக நினைக்கிறார்களா?
காவல்துறையிடம் பாதுகாப்பு கேட்டால் கொலை செய்யப்படுவார்கள் என்ற புதிய வரலாற்றை இந்த தவெக ஆட்சியாளர்கள் உருவாக்கி இருக்கிறார்கள்.
சட்டமன்றத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து கேள்வி கேட்டால், ‘1974-இல் என்ன நடந்து தெரியுமா... அமலாக்கத் துறை என்ன செய்தது தெரியுமா’ என்று திசைதிருப்பும் முதல்வர், இந்த கொலைக்கு என்ன பதில் வைத்திருக்கிறார்.
இந்த வழக்கில் திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் உட்பட சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் வழக்குப்பதிவு செய்வதோடு, சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும்.
தலைநகரில் மீண்டும் ஒரு கொலை நடக்காமல் இருப்பதற்கு தேவையான கடுமையான நடவடிக்கையை இந்த அரசு எடுக்க வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.