

பி.டி அரசகுமார்
சென்னை: தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக ரூ.100 கோடி மோசடி விவகாரத்தில் திமுக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பின்னணியில் உள்ளவர்கள் குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
சென்னை, தி.நகரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அண்மையில் புகார் ஒன்று அளிக்கப்பட்டது. அதில், ‘கடந்த 2 ஆண்டுகளாக தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளி நிர்வாகிகள் தங்கள் பள்ளிகளுக்கான அங்கீகாரம், தரம் உயர்த்துதல் மற்றும் திட்ட அனுமதி ஆகியவற்றைப் பெறுவதில் சிரமங்களை எதிர் கொண்டிருந்தனர்.
அப்போது, சென்னை, சாலிகிராமத்தில் ‘தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம்’ என்ற பெயரில் பதிவு செய்யப்படாத சங்கத்தை நடத்தி வந்த சாலிகிராமம், மெஜஸ்டிக் காலனியைச் சேர்ந்த பி.டி அரசகுமார் (59) என்பவர் தனக்குள்ள அரசியல் மற்றும் அதிகார தொடர்புகளைப் பயன்படுத்தி தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், பள்ளி தரம் உயர்வு, திட்ட அனுமதி உள்பட பிற சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி தமிழகம் முழுவதும் உள்ள பல தனியார் பள்ளி நிர்வாகிகளிடமிருந்து பணம் பெற்றுக் கொண்டு,உறுதியளித்தபடி அனுமதிகள் பெற்றுத் தராமலும், பணத்தை திரும்ப தராமலும் சுமார் ரூ.100 கோடிக்கும் அதிகமான தொகையை வசூலித்து ஏமாற்றி உள்ளார்.
எனவே, பி.டி அரசகுமார் மற்றும் அதன் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து, புகாருக்குள்ளான திமுக நிர்வாகியான பி.டி.அரசகுமாரை நேற்றுமுன்தினம் கைது செய்தனர். இவரது பின்னணியில் முன்னாள் எம்எல்ஏ ஒருவரும், மேலும் சிலரும் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, இந்த மோசடியின் பின்னணியில் வேறு யார்? யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்ற பெயர் பட்டியலை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சேகரித்து வருகின்றனர். அதன் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.