

தமிழக காங்கிரஸின் முன்னாள் தலைவர்கள் சிலர் ராஜ்ய சபா சீட் கேட்டு டெல்லியில் முகாமிட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
இதுகுறித்து பேசும் சத்தியமூர்த்தி பவன் வட்டாரங்கள், "2016 முதல் 2019 வரை தமிழக காங்கிரஸ் தலைவராக திருநாவுக்கரசர் இருந்தார். 2019 மக்களவைத் தேர்தலில் திருச்சி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால் தொகுதி மக்களுக்கு எதுவும் செய்யாததால் கடும் அதிருப்தி நிலவியது.
இதனால் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் எவ்வளவு முயன்றும் திமுக அவருக்கு சீட் கொடுக்கவில்லை. இதனால் கடும் அதிருப்தியில் இருந்து வருகிறார். காங்கிரசுக்கு திமுக கொடுக்கும் மாநிலங்களவை இடத்தைப் பெற திருநாவுக்கரசர் தீவிரம் காட்டி வருகிறார்.
சமீபத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்த அவர், "கடந்த முறை எனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. எனவே, இந்த முறை மாநிலங்களவை உறுப்பினர் வாய்ப்பு வழங்கினால் கட்சிப் பணிகளைத் தீவிரப்படுத்துவேன்" எனக் கோரிக்கை வைத்துள்ளார். ஆனால் கார்கேவோ, "ஆர்ப்பாட்டம், போராட்டங்களில் உங்கள் பங்களிப்பு போதிய அளவில் இல்லை" என வெளிப்படையாகவே அதிருப்தி தெரிவித்ததாகச் சொல்லப்படுகிறது.
திருநாவுக்கரசரைத் தொடர்ந்து, முன்னாள் தலைவர் கே.எஸ். அழகிரியும் மாநிலங்களவை சீட் ரேஸில் குதித்துள்ளார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கடலூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் விரக்தியில் இருக்கும் அவர், இந்த முறை எப்படியாவது நாடாளுமன்றத்திற்குள் நுழையத் துடிக்கிறார். இவர்களுடன் முன்னாள் தலைவர்கள் தங்கபாலு, முன்னாள் எம்.பிவிஸ்வநாதன் ஆகியோர் மாநிலங்களவை சீட்டுக்காக மல்லுக்கட்டி வருகிறார்கள்.
முன்னாள் தலைவர்கள் இவ்வளவு முட்டி மோதினாலும், டெல்லி மேலிடத்தின் பார்வை வேறு திசையில் இருக்கிறது. காங்கிரஸின் தேசிய செய்தித் தொடர்பாளரும், ராகுல் காந்தியின் நம்பிக்கைக்குரியவருமான பவன் கேராவை தமிழகம் வழியாக மாநிலங்களவைக்கு அனுப்ப மேலிடம் திட்டமிட்டுள்ளது.
டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்க்ஷித்தின் ‘வலது கை'யாகச் செயல்பட்ட அனுபவம் கொண்ட பவன் கேரா, தற்போது காங்கிரஸின் ஊடகப் பிரிவுத் தலைவராக இருந்து பாஜக-வுக்கு எதிராகக் கடுமையான வாதங்களை முன்வைத்து வருகிறார். அவரை நாடாளுமன்றத்திற்குள் கொண்டு வருவதே ராகுல் காந்தியின் விருப்பமாக உள்ளது.
ஆனால், இங்கேதான் சிக்கல் நீடிக்கிறது. "தமிழக ஒதுக்கீட்டில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவருக்குத்தான் சீட் கொடுப்போம்; வெளிமாநிலத்தவருக்குக் கொடுக்க முடியாது" என்பதில் திமுக பிடிவாதமாக இருப்பதாகக் கூறப்படுகிறது." என்றனர்.