மாநிலங்களவை சீட்டுக்கு மல்லுக்கட்டும் விசிக

மாநிலங்களவை சீட்டுக்கு மல்லுக்கட்டும் விசிக
Updated on
1 min read

காங்கிரஸ் கட்சி மாநிலங்களவை சீட் கேட்டு திமுகவுக்கு அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியும் ஒரு மாநிலங்களவை இடத்தைக் கோரி கோதாவில் குதித்துள்ளது. இது திமுக கூட்டணிக்குள் புதிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சட்டமன்றத் தேர்தலிலும் திமுக கூட்டணியில் தொடர்வதை விசிக தலைவர் திருமாவளவன் உறுதி செய்துள்ளார். இருப்பினும், கடந்த முறையை விடக் கூடுதல் சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை சீட் கேட்டு திமுகவுக்கு விசிக நெருக்கடி கொடுத்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து விசிக தரப்பில் பேசியவர்கள், கடந்த தேர்தலில் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட 6 தொகுதிகளை எங்களால் முழுமையாக ஏற்க முடியவில்லை.

குறிப்பாக விசிக வலுவாக இருக்கும் தொகுதிகளைக் கேட்டபோதும் திமுக வழங்கவில்லை. இருந்தபோதிலும், கொள்கை உறுதியால் திமுகவுடனேயே நிற்கிறோம். அதனால்தான் எங்களது தலைவர் திருமாவளவன், 'மானம் பெரியது, சீட் முக்கியமல்ல; குறைவான இடங்கள் கொடுத்தாலும் சண்டையிட்டுக் கூடுதல் இடங்களைக் கேட்போமே தவிர, கூட்டணியை விட்டு விலக மாட்டோம்' எனத் தெளிவாகக் கூறியிருந்தார்.

தற்போது கூட்டணிக்குள் புதிய கட்சிகள் வருவதால், பழைய கட்சிகளின் தொகுதிகள் குறைக்கப்படலாம் என்ற தகவல் விசிக தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, புதிதாகப் பேச்சுவார்த்தையில் இருக்கும் தேமுதிக-வுக்கு 10 தொகுதிகளுடன் ஒரு மாநிலங்களவை சீட் வழங்கப்படலாம் என்ற செய்தி விசிக-வினரை மேலும் கொதிப்படையச் செய்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, விசிக நிர்வாகிகள் திருமாவளவனிடம் ஆலோசித்துள்ளனர். அதில் குறைந்தபட்சம் 15 சட்டமன்றத் தொகுதிகள், ஒரு மாநிலங்களவை இடம் ஆகியவற்றை வலியுறுத்த முடிவு செய்யப்பட்டு, இந்த கோரிக்கை திமுக தலைமையிடம் கொண்டு செல்லப்பட்டுள்ளது" என்றனர்.

இதுகுறித்து திமுக மூத்த நிர்வாகிகள், "கூட்டணி கட்சிகள் கூடுதல் இடங்களைக் கேட்பது அவர்களது உரிமை. விசிக தொடர்ந்து திமுகவின் கருத்தியலுக்குப் பலம் சேர்த்து வருவதால், அவர்களுக்குக் கூடுதல் இடங்களை வழங்க முதல்வர் ஸ்டாலின் ஆலோசித்து வருகிறார். தற்போதுள்ள சூழலில் விசிக-வுக்கு 7 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளது. அவர்கள் கேட்கும் மாநிலங்களவை சீட் குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. ஒருவேளை மாநிலங்களவை சீட் வழங்கப்படாத பட்சத்தில், 8 சட்டமன்றத் தொகுதிகள் வரை ஒதுக்கப்படலாம்," எனத் தெரிவித்தனர்.

மாநிலங்களவை சீட்டுக்கு மல்லுக்கட்டும் விசிக
திமுக தேர்தல் அறிக்கை எப்போது? - கனிமொழி தகவல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in