சிறிய கட்சிகளின் அடையாளத்தை விழுங்கும் பெரிய கட்சிகள்!

- இரா.அர்ஜுனமூர்த்தி, பாஜக தேர்தல் அறிக்கை குழு உறுப்பினர்
சிறிய கட்சிகளின் அடையாளத்தை விழுங்கும் பெரிய கட்சிகள்!
Updated on
1 min read

இந்திய ஜனநாயகத்தில் ‘கூட்டணி' என்பது வெறும் எண்களின் கூட்டல் மட்டுமல்ல; அது ஒரு தத்துவத்தின் நீட்சி. ஆனால், தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த 60 ஆண்டுகளில் கூட்டணி அரசியல் என்பது சிறிய கட்சிகளை வளர்த்ததா அல்லது அதன் அடையாளத்தை மெல்ல மெல்ல அழித்து ஒரு பெருங்கட்சிக்குள் ஐக்கியமாக்கியதா என்ற விவாதம் தற்போது மேலெழுந்துள்ளது.

1950 மற்றும் 60-களில் தமிழகத்தின் அரசியல் களம் தொழிலாளர் இயக்கங்களின் கோட்டையாக இருந்தது. கம்யூனிஸ்ட் கட்சிகள் தொழிற்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கின. ‘வர்க்கப் போராட்டம்' என்பதே அன்றைய அரசியலின் மையப்புள்ளி. இருப்பினும், 1967-ல் திமுக-வின் எழுச்சி இந்தப் போக்கை மாற்றியது. ‘திராவிட அடையாளம்' மற்றும் ‘சமூக நீதி' என்ற முழக்கங்கள், வர்க்க அரசியலை பின்னுக்குத் தள்ளின.

திமுக-வின் தொழிலாளர் முன்னேற்றச் சங்கம் மற்றும் அரசு உருவாக்கிய பல்வேறு தொழிலாளர் நல வாரியங்கள், கம்யூனிஸ்ட் கட்சிகளின் பிடியில் இருந்து தொழிலாளர் வாக்கு வங்கியை மெல்ல மெல்லத் தன்வசப்படுத்தின. இன்று கம்யூனிஸ்ட் கட்சிகள் பலமான இடதுசாரி சித்தாந்தத்தைக் கொண்டிருந்தாலும், தேர்தல் களத்தில் திராவிடக் கட்சிகளின் தயவை எதிர்பார்க்கும் நிலைக்கு அவை தள்ளப்பட்டுள்ளன.

திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு துருவங்களே இப்போது தமிழக அரசியலின்மையப் புள்ளிகளாக உள்ளன. குறிப்பாக, திமுக கூட்டணியில் இணையும் சாதி சார்ந்த சிறு கட்சிகள் மற்றும் நடுத்தரக் கட்சிகள், காலப்போக்கில் தங்களின் தனித்துவமான கொள்கைகளை இழந்து, பெரிய கட்சியின் நிழலிலேயே வாழப் பழகிக் கொள்கின்றன.

தமிழகத்துக்கு வெளியே குறிப்பாக, பாஜக போன்ற தேசியக் கட்சிகள் அமைக்கும் கூட்டணி சில இடங்களில் மாறுபட்ட முடிவுகள் தந்துள்ளன. பிஹாரில், நிதிஷ் குமாருக்கு முதல்வர் பதவியை விட்டுக் கொடுத்தது. பஞ்சாப்பில், சிரோமணி அகாலி தளத்துடன் நீண்ட காலப் பயணம்.

வடகிழக்கு மாநிலங்களில் என்இடிஏ மூலம் பிராந்தியத் தலைவர்களுக்கு அதிகாரம். இந்த மாதிரிகள் கூட்டணிக் கட்சிகளின் அடையாளத்தைப் பாதுகாக்கும் முயற்சியாகப் பார்க்கப்படுகின்றன. ஆனால், தமிழகத்தில் காமராஜர், ராஜாஜி, மூப்பனார் போன்ற ஆளுமைகள் வழிநடத்திய கட்சிகளே திராவிட அரசியலின் சுழலில் சிக்கித் தங்களின் செல்வாக்கை இழந்துள்ளன.

தமிழக அரசு அமைத்த கட்டுமான வாரியம், போக்குவரத்து வாரியம் போன்ற அமைப்புகள் தொழிலாளர்களுக்கு பல நன்மைகளைச் செய்தாலும், அவை ஆளுங்கட்சியின் அரசியல் கட்டுப்பாட்டுக்குள் இயங்குவதாக ஒரு விமர்சனம் உண்டு. இது சுயேச்சையான தொழிலாளர் இயக்கங்களின் வீழ்ச்சிக்கு மறைமுகக் காரணமாக அமைந்தது.

கூட்டணி அரசியல் என்பது அனைவருக்குமான இடத்தைப் பெற்றுத் தரும் ஒரு ஜனநாயகக் கருவியா அல்லது ஒரு பெரிய மீன் சிறிய மீன்களை விழுங்கும் அதிகார வேட்டையா?

- இரா.அர்ஜுனமூர்த்தி, பாஜக தேர்தல் அறிக்கை குழு உறுப்பினர்

சிறிய கட்சிகளின் அடையாளத்தை விழுங்கும் பெரிய கட்சிகள்!
ஈரானின் ‘ஆயில்’ ஆயுதம்... போரில் ட்ரம்ப்புக்கு சேதாரமா? - ஒரு நிலவரப் பார்வை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in