

சென்னை: காவல்துறை மரியாதையுடன் கவிஞர் ஈரோடு தமிழன்பன் உடல் தகனம் செய்யப்பட்டது.
இலக்கிய படைப்புலகில் பன்முக ஆளுமையாக விளங்கிய கவிஞர் ஈரோடு தமிழன்பன் (92) வயது மூப்பு காரணமாக நேற்று முன்தினம் காலமானார். கோயம்பேட்டில் உள்ள இல்லத்தில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
கவிஞர் ஈரோடு தமிழன்பன் உடலுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்தது. இதுதொடர்பாக, அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கவிஞர் ஈரோடு தமிழன்பன் என்கிற ந.செகதீசன் உடல்நலக்குறைவால் இயற்கை எய்தியதையடுத்து, அவரது உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். பெருவாழ்வுக்கு சொந்தக்காரரான அவரது தமிழ் தொண்டினை கவுரவிக்கும் விதமாக காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு கறப்பட்டிருந்தது.
இதையடுத்து, நேற்று கோயம்பேடு இல்லத்தில் இருந்து ஈரோடு தமிழன்பன் உடல் ஊர்வலமாக சென்னைஅரும்பாக்கம் மின்மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு 30 குண்டுகள்முழங்க காவல்துறை மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது.