

எம்எல்ஏ பதவியை, ராஜினாமா செய்யும் கடிதத்தை தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவுவிடம் செங்கோட்டையன் வழங்கினார். படம்: எல்.சீனிவாசன்
முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். மாலையில் விஜய்யை அவரது வீட்டில் சந்தித்து ஆலோசனை நடத்திய செங்கோட்டையன் இன்று தனது ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைகிறார்.
தமிழகத்தில் 2026 தேர்தலில் அதிமுக வெற்றி பெற, பிரிந்தவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்று கட்சிக்குள் வலியுறுத்தி வந்தவர் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன். இதற்கு கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி மறுத்து வந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் முதலே பழனிசாமியிடம் செங்கோட்டையன் பாராமுகமாக இருந்து வந்தார். ரகசியமாக டெல்லி சென்று பாஜக மூத்த தலைவர்களையும் சந்தித்துவிட்டு வந்தார். கட்சியில் இருந்த எம்ஜிஆர் காலத்து மூத்த அரசியல்வாதியான செங்கோட்டையன், 2026 தேர்தல் வெற்றிக்கு கட்சி ஒன்றிணைப்பை வலியுறுத்தி, பழனிசாமிக்கு 10 நாட்கள் காலக்கெடுவை விதித்தார்.
இதனால், அவரது கட்சிப் பதவிகள் பறிக்கப்பட்ட நிலையில், அதிமுகவிலிருந்து பிரிந்திருக்கும் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரனுடன் பசும்பொன்னில் அண்மையில் நடைபெற்ற தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்றார். இதன் தொடர்ச்சியாக, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டார்.
இந்நிலையில், அதிமுகவின் பலத்தை, செங்கோட்டையனின் கோட்டையான கோபிசெட்டிப்பாளையம் தொகுதியில் நிரூபிக்க, நவ.30-ம் தேதி பிரம்மாண்ட பொதுக்கூட்டக்கு பழனிசாமி ஏற்பாடு செய்து வருகிறார். இந்தச் சூழலில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய செங்கோட்டையன், இன்று (27-ம் தேதி) தவெக-வில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், நேற்று சென்னை தலைமைச் செயலகம் வந்தார். சட்டப் பேரவைத் தலைவர் மு.அப்பாவுவை சந்தித்து, தனது எம்எல்ஏ பதவி ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.
திமுகவில் இணைக்க முயற்சி: செங்கோட்டையன், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வதை அறிந்த அமைச்சர் பி.கே.சேகர்பாபு, கொங்கு மண்டல திமுகவை வலுப்படுத்தும் நோக்கில் செங்கோட்டையனை திமுகவுக்கு இழுக்க திட்டமிட்டதாக கூறப்படுகிறது. அவருடன் சேகர்பாபு பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அதில் செங்கோட்டையன் உறுதியான பதிலைத் தரவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்தச் சூழலில் சேப்பாக்கத்தில் உள்ள எம்எல்ஏ விடுதிக்கு நேற்று மதியம் செங்கோட்டையன் வந்தார். அங்கு தனது ஆதரவாளர்களுடன் சிறிது நேரம் ஆலோசனை நடத்திய பிறகு, தவெக தலைவர் விஜய்யை சந்திக்க பட்டினப்பாக்கம் புறப்பட்டார். அப்போது, அவர் தனது காரில் செல்லாமல், ஆதவ் அர்ஜுனாவின் காரில் ஏறி பட்டினப்பாக்கத்தில் உள்ள விஜய்யின் வீட்டுக்கு புறப்பட்டு சென்றார்.
பட்டினப்பாக்கம் வீட்டில் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பிரச்சார மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, இணை பொதுச் செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார். மாலை 4.30 மணி அளவில் தனது வீட்டுக்கு வந்த, செங்கோட்டையனை விஜய் வரவேற்றார்.
தொடர்ந்து, செங்கோட்டையனுக்கு தேநீரும் வழங்கி உபசரித்தார். விஜய் - செங்கோட்டையனின் இந்த சந்திப்பு மாலை 6.33 மணி வரை சுமார் 2 மணி நேரம் நடைபெற்றது. குறிப்பாக இந்த சந்திப்பின் போது, செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைவது குறித்தும் அரசியல் நிலவரம் பற்றியும் விஜய்யுடன் ஆலோசனை நடத்தினார்.
மேலும், செங்கோட்டையன் போன்ற அனுபவம் மிக்க தலைவர் தவெகவில் இணைவது கட்சிக்கு வலு சேர்க்கும் என்பதால், செங்கோட்டையனுக்கு அமைப்பு பொதுச் செயலாளர் பதவி வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் இன்று (27-ம் தேதி) காலை 10 மணிக்கு செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.