

எடப்பாடி தொகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி.
மேட்டூர்: அதிமுக தீர்ந்து போன கட்சி அல்ல, மக்கள் குறைகளை தீர்த்து வைத்த கட்சி, என பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்தார்.
எடப்பாடி தொகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: ஒவ்வொரு கட்சியும் தொடர்ந்து வெற்றி பெற்ற வரலாறு கிடையாது. வெற்றி வாய்ப்பை இழந்த கட்சி ஆட்சிக்கு வருவது தொடர் கதை தான். தவெக 108 இடங்களில் தான் வெற்றி பெற்றுள்ளது.
8 மாவட்டங்களில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. தவெக பல கட்சிகள் ஆதரவுடன் ஆட்சியில் அமர்ந்துள்ளது. நாற்காலிக்கு 4 கால்கள் உள்ள நிலையில், 2 கால்கள் தான் தவெகவின் கால்கள். மீதமுள்ளவை இரவல் கால்கள். எப்போது வேண்டுமானாலும் 2 கால்கள் உடையும்போது நாற்காலி தானாக சாயும். திமுக கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் தான் தவெக ஆட்சிக்கு முட்டு கொடுக்கின்றனர்.
தவெக தலைவர் ரூ.10 லட்சம் கோடி கடன் இருப்பதாக தெரிவித்த நிலையில் பல்வேறு வாக்குறுதிகளை வெளியிட்டார். இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. குடும்ப தலைவிகள் 1.50 கோடி பேருக்கு மாதம் ரூ.2,500 என ஆண்டுக்கு ரூ.45,000 கோடி தேவை. கொடுக்கப்பட்ட வாக்குறுதியை தட்டிக் கழிப்பதற்காக வெள்ளை அறிக்கை வெளியிடப்போவதாக மக்களை ஏமாற்ற பார்க்கிறீர்கள்.
முதல்வர் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் 436 திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டது. எந்த துறைகளில் எத்தனை திட்டங்கள், நிதி என எதுவும் அறிவிக்கவில்லை. இந்த ஆட்சி எத்தனை நாட்கள் நீடிக்கும் என தெரியவில்லை. தவெக ஆட்சிக்கு வந்த பிறகு சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. திமுக ஆட்சியில் இருந்தது போல் இந்த அரசாங்கத்தில் நடக்கிறது. திருச்சியில் தீர்ந்து போன கட்சி மற்றும் சிலர் என முதல்வர் தெரிவித்தார். அதிமுக தீர்ந்து போன கட்சி அல்ல, மக்கள் குறைகளை தீர்த்து வைத்த கட்சி. தவெக கட்சி தொடங்கி 3 ஆண்டுகளில் மக்களுக்கு என்ன செய்தார்கள்.
10 தேர்தலில் தோல்வி கண்டவர் பழனிசாமி என திமுக தலைவர் ஸ்டாலின் பேசினார். தற்போது, அவரே தோல்வியடைந்துள்ளார். ஆட்சி, அதிகாரம் இருக்கும் போது ஜாக்கிரதையாக பேச வேண்டும். 4 எம்எல்ஏக்கள் குதிரை பேரம் பேசி ராஜினாமா செய்திருக்கிறார்கள். விரல் மை கூட காய்வதற்கு முன்பு வேறு கட்சிக்கு போயிருக்கிறார்கள். இந்த கட்சிக்கு துரோகம் செய்தவர்களை இருபெரும் தலைவர்களின் ஆன்மா மன்னிக்காது. இவ்வாறு அவர் பேசினார்.