கடன் வாங்கி திட்டங்களை செயல்படுத்தும் நிலை: பட்ஜெட் குறித்து பழனிசாமி விமர்சனம்

பட்ஜெட் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் பழனிசாமி. படம்: எஸ்.சத்தியசீலன்

பட்ஜெட் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் பழனிசாமி. படம்: எஸ்.சத்தியசீலன்

Updated on
1 min read

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, தலைமைச் செயலக வளாகத்தில் பட்ஜெட் குறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது: தவெக அரசு இதுவரை எந்தவொரு புதிய திட்டத்தையும் கொண்டுவரவில்லை. வெறும் வசனத்தை பேசியே 85 நாட்களை கடந்துவிட்டனர். எல்லாவற்றுக்கும் ரீல்ஸ், ரீல் விடுவதுதான் இவர்களின் சாதனையாக இருக்கிறது.

தேர்தல் வாக்குறுதிகள்: தேர்தல் நேரத்தில் குடும்பத்தலைவிகளுக்கு மாத உதவித் தொகை ரூ.2,500 ஆக உயர்த்தப்படும், ஆண்டுதோறும் வீடுகளுக்கு 6 காஸ் சிலிண்டர்கள் விலையில்லாமல் அளிக்கப்படும், முதியோர் உதவித் தொகை ரூ.3 ஆயிரமாக உயர்த்தப்படும், வேலையில்லா பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ.4 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும்.

அதேபோல் 5 ஏக்கர் நிலம் வைத்துள்ள சிறு குறு விவசாயிகள் கூட்டுறவு சங்கத்தில் வாங்கிய பயிர் கடனை முழு தள்ளுபடி, அதற்கு மேல் நிலம் உள்ளவர்கள் வாங்கிய கடனில் பாதியளவு தள்ளுபடி உள்ளிட்ட ஏராளமான திட்டங்களை வாக்குறுதிகளாக அறிவித்தனர். ஆனால் பட்ஜெட்டில் எந்தவொரு புதிய திட்டமும் இடம்பெறவில்லை. ஏற்கெனவே இருக்கும் திட்டங்களுக்கு பெயரை மாற்றி ஸ்டிக்கர் ஒட்டி அறிவித்துள்ளனர்.

இன்றைக்கு வருவாய் பற்றாக்குறையாக ரூ.55,785 ஆகவும், நிதி பற்றாக்குறை ரூ.1 லட்சத்து 21,819 கோடியாகவும் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதற்கிடையே ரூ.10 லட்சத்து 98,768 கோடி கடன் இருக்கிறது. இதையெல்லாம் எப்படி சரிசெய்ய போகிறார்கள்?

பூஜ்யம் மதிப்பெண்: இதற்கான எந்த விளக்கமும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. தவெக ஆட்சி அமைந்த இந்த குறுகிய காலத்தில் ரூ.20 ஆயிரம் கோடி கடன் வாங்கியுள்ளனர். கடன் வாங்கி மட்டுமே திட்டங்களை செயல்படுத்த முடியும் என்கிற நிலையில்தான் இந்த அரசு இருக்கிறது. நிபுணர் குழுவும் கடன் வாங்குவதற்காகத்தான் அமைக்கப்பட்டுள்ளதா? என்ற சந்தேகம் கூட எழுகிறது. தவெக அரசின் பட்ஜெட்டுக்கு பூஜ்ஜியம் மதிப்பெண் கொடுக்கலாம். இவ்வாறு அவர் கூறினர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in