

தஞ்சாவூர்: அதிமுகவில் ஏற்பட்ட பிளவு காரணமாக மன உளைச்சலில் இருந்த கட்சி நிர்வாகி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். ‘கட்சி நிர்வாகிகள் ஒன்றுசேர வேண்டும். பழனிசாமி இறுதி அஞ்சலி செலுத்த வேண்டும்’ என்று அவர் கூறியிருந்ததை அடுத்து, அவரது உடலுக்கு அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி அஞ்சலி செலுத்தினார்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருப்பனந்தாள் வளையல்காரத் தெருவைச் சேர்ந்தவர் மகேந்திரன் (37). இவர் திருப்பனந்தாளில் பூக்கடை நடத்தி வந்தார். அதிமுகவில் கிழக்கு மாவட்ட வர்த்தக அணி இணைச் செயலாளராக பொறுப்பு வகித்தார். இவருக்கு முனீஸ்வரி (32) என்ற மனைவியும், நித்ஸ்ரீ (2) என்ற மகளும் உள்ளனர்.
சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு, அதிமுக இரு அணியாகப் பிரிந்தது. இதனால் மகேந்திரன் சில நாட்களாக மிகவும் மன உளைச்சலில் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் அருகிலேயே தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திருப்பனந்தாள் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதுபற்றி தகவல் அறிந்த அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி நேற்று திருப்பனந்தாளில் உள்ள அவரது வீட்டுக்கு வந்து மகேந்திரனின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
அப்போது செய்தியாளர்களிடம் பழனிசாமி கூறியதாவது: அதிமுக தஞ்சை கிழக்கு மாவட்ட வர்த்தக அணி இணைச் செயலாளர் மகேந்திரன் தனது இன்னுயிரை மாய்த்துக் கொண்ட செய்தி மிகுந்த அதிர்ச்சியும், மன வேதனையும் அளிக்கிறது. இந்த பகுதியில் சிறப்பான முறையில் கட்சிப் பணியாற்றி, கட்சி நிர்வாகிகளிடமும், தொண்டர்களிடமும் நல்ல பெயர் பெற்றவர். தலைமைக்கும் மிகுந்த விசுவாசமாக செயல்பட்டவர். அவருடைய மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பு. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அதிமுகவினருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மகேந்திரனின் குழந்தையின் முழு படிப்புச் செலவையும் அதிமுக ஏற்றுக் கொள்ளும். அதேபோல, கட்சித் தலைமை சார்பில் ரூ.30 லட்சம், தஞ்சாவூர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் ரூ.25 லட்சம் என ரூ.55 லட்சம் நிவாரணம் குடும்பத்தினருக்கு வழங்கப்படும். இனி கட்சியினர் யாரும் இதேபோன்ற சம்பவங்களில் ஈடுபட வேண்டாம் என தாழ்மையுடன் தொண்டர்களின் பாதம் பணிந்து, வணங்கி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கண்ணீர் மல்க தெரிவித்தார்.
தற்கொலைக்கு முன்பு உருக்கமான பதிவு
அதிமுக தஞ்சை கிழக்கு மாவட்ட வர்த்தக அணி இணைச் செயலாளர் மகேந்திரன் நேற்று முன்தினம் இரவு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக, முகநூலில் ஒரு வீடியோவை அவர் பதிவு செய்துள்ளார். அதில், ‘‘அதிமுகவில் சில நாட்களாக நடந்து கொண்டிருக்கும் பிரச்சினைகளை பார்க்கும்போது என்னைப் போல எளிய தொண்டர்கள் மிகவும் மனவேதனையில் இருக்கிறோம். மீண்டும் எடப்பாடியார் தலைமையில் அதிமுக ஆட்சி அமைக்க வேண்டும்.
எனது இறப்புக்கு பிறகாவது அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் ஒன்றுசேர்ந்து மீண்டும் அம்மாவின் ஆட்சி அமைக்க வேண்டும். என்னுடன் இதுவரை பயணித்த கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனது கடைசி ஆசை... எனது உடலுக்கு பொதுச் செயலாளர் அஞ்சலி செலுத்தினால், எனது ஆன்மா சாந்தி அடையும்’’ என்று அவர் தெரிவித்திருந்தார்.