அதிமுக ஆட்சி அமைய தென் மாவட்ட மக்கள் துணை நிற்பார்கள்: இபிஎஸ் நம்பிக்கை
மதுரை: தேசிய ஜனநாயகக் கூட்டணி அதிக தொகுதிகளில் வெற்றிபெற்று அதிமுக ஆட்சி அமைய தென் மாவட்ட மக்கள் துணை நிற்பார்கள் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்தார்.
மதுரையில் நேற்று நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி பேசியதாவது: தமிழகத்தில் உள்ள மக்கள் விரோத ஆட்சியை அகற்றவே தேசிய ஜனநாயக கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.
எங்கள் கூட்டணியில் மக்கள் செல்வாக்குப் பெற்ற கட்சிகள் இணைந்துள்ன. எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு தென் மாவட்ட மக்கள் பக்கபலமாக இருந்தனர். எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கியபோது திண்டுக்கல் மக்களவைத் தேர்தலில் வெற்றியைக் கொடுத்து தென் மாவட்ட மக்கள் ஆதரித்தனர்.
அதுபோல், வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் அதிக தொகுதிகளில் வெற்றிபெறச் செய்து அதிமுக ஆட்சி அமைவதற்கு தென் மாவட்ட மக்கள் துணை நிற்பார்கள்.
மத்திய அரசு நிதி வழங்கவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் அடிக்கடி அவதூறுகளைப் பரப்புகிறார். இன்று கூட தமிழகத்துக்கு ரூ.4,500 கோடி வளர்ச்சித் திட்டங்களை மோடி தொடங்கி வைத்துள்ளார்.
குடும்ப நலன் மட்டுமே திமுக கட்சியின் நிலைப்பாடாக உள்ளது. 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ஊழல் செய்தனர்.
சர்க்காரிய கமிஷன் அறிக்கையில் திமுக விஞ்ஞான முறையில் ஊழல் செய்ததாக குறிப்பிட்டுள்ளனர். கடந்த 5 ஆண்டு கால ஊழல் நிறைந்த திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும்.
தென் மாவட்டங்களுக்கு அதிமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. 11 அரசு மருத்துவக் கல்லூரிகள் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டன. திமுக ஆட்சியில் ஒரு மருத்துவக் கல்லூரியைக்கூட பெற முடியவில்லை.
அதிமுக ஆட்சியில் இருந்தபோதுதான் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை திட்டம் மதுரைக்குக் கொண்டு வரப்பட்டது. தற்போது இந்த மருத்துவமனை கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அந்த மருத்துவமனையை வரவிடாமல் திமுக தடுக்க பார்த்தது. மதுரை விமான நிலைய விரிவாக்கத்துக்கு அதிமுக ஆட்சியில் ‘அண்டர் பாஸ்’ முறையில் முயற்சிகளைச் செய்தோம். தற்போது இந்த திட்டத்தையும் திமுக அரசு முடக்கி வைத்துள்ளது.
