

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான பழனிசாமி, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை நேற்று சந்தித்தார்.
சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, திமுக ஆட்சியில் நான்கரை ஆண்டுகளில் ரூ.4 லட்சம் கோடி ஊழல் நடைபெற்றதற்கான புகார் பட்டியல் வழங்கினார்.
அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான பழனிசாமி, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை நேற்று சந்தித்தார். அப்போது, திமுக ஆட்சியில் நடைபெற்ற ரூ.4 லட்சம் கோடி ஊழல்கள் குறித்தான புகார் பட்டியல் வழங்கி, அவற்றை விசாரிக்க உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், எஸ்பி.வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம், டி.ஜெயக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
ஆளுநரிடம் மனு அளித்து விட்டு, வெளியே வந்தபின் செய்தியாளர்களிடம் பழனிசாமி கூறியதாவது: கடந்த 2021 முதல் நான்கரை ஆண்டுகால திமுக ஆட்சியில் நடைபெற்ற ரூ.4 லட்சம் கோடி ஊழல் குறித்த பட்டியலை ஆளுநரிடம் வழங்கி உள்ளோம். திமுக கடந்த 56 மாதங்களாக, ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கோடி கடன் வாங்கி,தமிழகத்தில் மிக மோசமான நிர்வாகம் செய்துள்ளது. இதனால் ஏற்கெனவே இருந்த கடனைவிட, கூடுதலாக சுமார் ரூ.4 லட்சம் கோடி கடன் அதிகரித்துள்ளது. ஆட்சிக்கு வந்த ஓர் ஆண்டிலேயே திமுக அரசின் கொள்ளை குறித்து ஆடியோவில் தெரிய வந்தது. ரூ.30 ஆயிரம் கோடியை வைத்துக் கொண்டு, சபரீசனும், உதயநிதியும் என்ன செய்வது என்று தெரியாமல் தவிப்பதாக அப்போதைய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசிய ஆடியோ வெளியானது.
ஊழல் செய்வதைத் தவிர, தமிழக மக்களுக்கு இவர்கள் எந்த நன்மையும் செய்யவில்லை. அரசின் பல்வேறு துறைகளில் அதிகளவில் ஊழல் செய்து, தமிழக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது என்பதையும், துறைவாரியாக எவ்வளவு ஊழல் நடைபெற்றது என்பதையும் ஆளுநரிடம் சுட்டிக்காட்டியிருக்கிறோம். ஊழல் குறித்த புகார் பட்டியல், முழு விவரங்களையும் வழங்கி இருக்கிறோம். ஊழல் குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் எனவும் ஆளுநரிடம் கோரிக்கை வைத்திருக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பின்னர், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் வருமாறு: இவ்வளவு பெரிய ஊழல் எந்த மாநிலத்திலும் நடைபெறவில்லை. அதற்கெல்லாம் மக்கள் உரிய தீர்ப்பை, வரும் தேர்தலில் அளிப்பார்கள். என் மீது கூட வழக்கு போட்டார்கள். வழக்கு போட்ட ஆர்.எஸ்.பாரதியே அதை திரும்பப் பெறுகிறோம் என்றார். நாங்கள் நிரபராதி என்று நிரூபித்துதான் நிற்கிறோம். தமிழகத்தில் ஊழல் முறைகேடுகளைச் சுட்டிக்காட்டி அமலாக்கத் துறை 2 முறை, அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளது. அந்த அறிக்கையின் அடிப்படையில் ஆதாரம் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், இந்த அரசு இன்னும் எப்ஐஆர் போடவில்லை.
அதேபோல் கிட்னி முறைகேட்டை இந்த அரசாங்கமே கண்டுபிடித்து, அதற்கு ஒரு குழு போட்டு, அந்த குழு சென்று ஆய்வு செய்து, முறைகேடு நடந்தது உண்மை என்று, அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்தது. அதன் மீது இதுவரை திமுக அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது? திமுக எம்எல்ஏவுக்கு சொந்தமான மருத்துவமனை என்பதால் நடவடிக்கை எடுக்கவில்லை.
அதிமுக ஆட்சி காலத்தில், 52 லட்சத்து 35,000 லேப்டாப்கள் மாணவர்களுக்கு கொடுத்தோம். திமுக அரசு 4 ஆண்டு காலமாக அதை கிடப்பில் போட்டுவிட்டு, இப்போது, லேப்டாப் கொடுத்திருக்கிறார்கள். இதை வரவேற்கிறோம். ஏனென்றால், இது அதிமுக அரசு கொண்டு வந்த திட்டம். வரும் தேர்தலில் மாணவர்களுடைய வாக்கு தேவை. அதற்குத்தான் இந்த லேப்டாப் கொடுக்கிறார்களே தவிர, மாணவர்களின் நலனுக்காக அல்ல. விவசாயிகள், செவிலியர்கள், பேருந்து தொழிலாளர்கள், இடை நிலை ஆசிரியர்கள், தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் என எல்லா தரப்பு மக்களும் வீதியில் வந்து போராடிக் கொண்டு இருக்கிறார்கள். வரும் தேர்தலில் அதிமுக தலைமையில் அமைக்கப்படும் கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று, தனிப் பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.