சென்னை: தமிழகத்தில் நெசவாளர் கூட்டுறவு சங்கங்களை அழிக்கும் முயற்சியில் திமுக அரசு ஈடுபட்டு வருவதாக அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் 2021-ல் திமுக அரசு பொறுப்பேற்றவுடன், பொங்கலுக்கு வழங்கும் இலவச வேட்டி, சேலைகளை ஏப்ரல், மே மாதங்களில்தான் வழங்கி வருகிறது.
மேலும், 50 சதவீதத்துக்கும் மேல் வெளி மாநிலங்களில் இருந்து முறைகேடாக வாங்கப்படுவதால், கைத்தறி மற்றும் விசைத்தறித் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.
மேலும், கைத்தறியில் 4 லட்சம் வேட்டிகளிலும், விசைத்தறியில் 13 லட்சம் வேட்டிகளிலும் நூலின் தன்மை மாறியுள்ளது என்று கூறி சங்கங்களுக்கே திருப்பி அனுப்ப திமுக அரசு உத்தரவிட்டிருக்கிறது.
தரம் குறைந்த நூலை விநியோகித்ததே கைத்தறித் துறைதான் என்பதையும், இதில் நடைபெற்ற ஊழலை மறைத்து, கூட்டுறவு சங்கங்கள் மீது பழிபோட்டு தப்பிக்கப் பார்க்கிறது திமுக அரசு.
10 ஆயிரம் வேட்டிகளுக்கு 20 வேட்டிகளை மட்டும் மாதிரியாக எடுத்து, தர சோதனை செய்துள்ளதாக நெசவாளர் கூட்டுறவு சங்கங்களைச் சேர்ந்தவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
ஏற்கெனவே நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் சங்கங்களுக்கு, வேட்டிகளை திருப்பி அனுப்புவதால், அனைத்து சங்கங்களும் பெரிய அளவில் நஷ்டப்பட்டு, மூடும் சூழல் ஏற் படும். எனவே, அனைத்து வேட்டிகளையும் மறுதரப் பரிசோதனை செய்ய வேண்டும்.
நெசவாளர் கூட்டுறவு சங்கங்களை அழிக்கும் முயற்சியில் திமுக அரசு ஈடுபடுகிறது. தேர்தலில் நெசவாளர்கள் திமுக அரசுக்கு தக்க பதிலடி தருவார்கள். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.