

மாதவரம் தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக வேட்பாளர் சுதர்சனத்துக்கு உற்சாக வரவேற்பு அளித்த பொதுமக்கள்.
மாதவரம்: மாதவரம் தொகுதி திமுக வேட்பாளராக 3-வது முறையாக போட்டியிடும் வழக்கறிஞர் எஸ்.சுதர்சனம், தொகுதிக்கு உட்பட்ட புழல் ஒன்றியம் காவாங்கரை, பாலாஜி நகர், கிருஷ்ணாநகர், சக்திவேல்நகர், காந்தி தெரு, திரு.வி.க.தெரு, ஜீவா தெரு, வள்ளுவர் தெரு, கண்ணப்பசாமி நகர், தியாகி சங்கரலிங்கனார் தெரு உள்ளிட்ட பகுதிகளில் கூட்டணி கட்சியினருடன் சென்று பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவருக்கு ஆரத்தி எடுத்தும், மலர்தூவியும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் எஸ்.சுதர்சனம், திமுகவின் திராவிட மாடல் 2.0 ஆட்சி தொடர்ந்து, கோட்டையில் மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராகவும், இந்த தொகுதியில் மூன்றாவது முறையாக நானும் எம்எல்ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டால்தான் மாதவரம் தொகுதியில் விடுபட்டுப்போன பல்வேறு சாதனைத் திட்டங்களை தடையின்றி தொடர முடியும்.
மாதவரம் வரை வந்துள்ள மெட்ரோ ரயில் சேவையை சோழவரம் நல்லூர் வரை விரிவாக்கம் செய்வதன் மூலம் புழல், செங்குன்றம், சோழவரம் பகுதியில் இருந்து சென்னைக்கு வேலைக்கு செல்வோர், பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவியர் பயனடைவர்.
எனது சொந்த செலவில் தொகுதி முழுவதும் 2 ஆயிரம் பேருக்கு தையல் இயந்திரங்கள் வழங்கி பெண்களை சுயதொழில் முனைவோராக மாற்றியுள்ளேன். பல்வேறு ஏரி. குளங்களை தூர்வாரி அழகுபடுத்தியுள்ளேன்.
30 ஆயிரம் பேருக்கு இலவச பட்டா வாங்கி கொடுத்துள்ளேன் என்று பிரச்சாரம் செய்து வருகிறார். மேலும், மாதவரம் - புழல் பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் மாதவரம் ரவுண்டானா புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சோழவரம் சுங்கச்சாவடி வரை சுமார் 17 கிமீ தூரத்துக்கு ரூ.1,900 கோடி செலவில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படும் என பல்வேறு வாக்குறுதிகளைத் தெரிவித்தார்.
அப்போது ஒரு சிறுமி திமுகவின் ரூ.8 ஆயிரம் பரிசு கூப்பன் மற்றும் ரூ.2 ஆயிரம் மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட வாக்குறுதிகளை மைக்கில் எடுத்துக்கூறி திமுக வேட்பாளர் சுதர்சனத்துக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தது வாக்காளர்களை பெரிதும் கவர்ந்தது.