‘புதுச்சேரி சட்டப்பேரவை தொடக்கவிழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தை உறுதி செய்க’ - எதிர்க்கட்சித் தலைவர் கடிதம்

புதுச்சேரி சட்டப்பேரவை
புதுச்சேரி சட்டப்பேரவை
Updated on
1 min read

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவையின் தொடக்கவிழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதை உறுதி செய்ய பேரவைத்தலைவருக்கு எதிர்க்கட்சித்தலைவர் கடிதம் அனுப்பியுள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் நாஜிம், தற்காலிக பேரவைத்தலைவர் அன்பழகனுக்கு அனுப்பியுளள கடிதத்தின் விவரம்: புதுச்சேரி சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் வருகின்ற 24-ம் தேதி துணைநிலை ஆளுநர் உரையுடன் தொடங்க உள்ளது. சட்டப்பேரவையின் நீண்டகால மரபு மற்றும் நமது தாய்மொழியான தமிழின் மாண்பை போற்றும் வகையில், கூட்டத்தொடரின் தொடக்க நிகழ்வாக 'தமிழ்த்தாய் வாழ்த்து' முதன்மையாக பாடப்பட்டு, அதன்பின்னர் 'வந்தே மாதரம்' மற்றும் நிறைவாக 'நாட்டுப்பண்' (தேசிய கீதம்) இசைக்கப்படுவதே முறையான மரபும், மரபுவழி நடைமுறையுமாகும்.

மேலும், இது தொடர்பான விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றபோது, மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் “தமிழ்த்தாய் வாழ்த்தை அரசு நிகழ்வுகளின் முடிவில்தான் பாட வேண்டும் என்று மத்திய அரசு ஒருபோதும் வற்புறுத்தவோ அல்லது கட்டாயப்படுத்தவோ இல்லை” என நீதிமன்றத்தில் தெளிவுபடுத்தியுள்ளார்.

எனவே, இதில் எந்தவித குழப்பத்திற்கும் இடமளிக்காமல், புதுச்சேரி மக்களின் உணர்வுகளுக்கும் மொழிப்பற்றுக்கும் மதிப்பளிக்கும் வகையில், வருகின்ற 24-ம் தேதி தொடங்கவுள்ள கூட்டத்தொடரில் துணைநிலை ஆளுநர் உரை நிகழ்த்துவதற்கு முன்பாகவே, அவையின் தொடக்க நிகழ்வாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவதை உறுதிசெய்து, அதற்குரிய ஆணை பிறப்பிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் பாஜக கூட்டணி என்டிஏ அரசு நடக்கிறது. கடந்த சில மாதங்களாக புதுச்சேரியில் முதலில் வந்தே மாதரமும், அதையடுத்து தேசியகீதமும், இறுதியில் தமிழ்த்தாய் வாழ்த்தும் இசைக்கப்பட்டு வந்தது.

தற்போது சுதந்திர தினத்தில் முதல் முறையாக புதுச்சேரியில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் தரப்பட்டது. கொடியேற்றத்துக்கு முன்பாக முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதே நடைமுறை சட்டப்பேரவை தொடக்க நிகழ்விலும் கடைபிடிக்கப்படும் எனவும் புதுச்சேரி மக்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.

புதுச்சேரி சட்டப்பேரவை
மேற்கு வங்க முன்னாள் துணை சபாநாயகர் ஆஷிஷ் பானர்ஜி தற்கொலை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in