தமிழகத்துக்கு தேவையான உரங்களை தடையின்றி வழங்கிட பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்

தமிழகத்துக்கு தேவையான உரங்களை தடையின்றி வழங்கிட பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்
Updated on
2 min read

சென்னை: நடப்பு காரீப் பருவத்துக்கு தேவையான உரங்களை தங்கு தடையின்றி தமிழகத்துக்கு வழங்கிட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் 40 சதவீதத்துக்கும் அதிகமானோர் வேளாண்மையை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர். தமிழகத்தில் சுமார் 48.27 லட்சம் ஹெக்டரில் நிகர சாகுபடியும், 62.25 லட்சம் ஹெக்டரில் மொத்த சாகுபடியும் மேற்கொள்ளப்படுகிறது. மேலும், தமிழகத்தில் மொத்த விவசாயிகளில் சுமார் 92 சதவீதம் பேர், சிறு மற்றும் குறு விவசாயிகளாவர்.

இந்தியாவின் மொத்த நீர் வளங்களில் 3 சதவீதம் மட்டுமே தமிழகத்தில் உள்ளது. நெல், சிறுதானியங்கள், எண்ணெய்வித்துகள், பருத்தி, கரும்பு, காய்கறிகள், மலர்கள், பழங்கள், மூலிகை மற்றும் நறுமணப் பயிர்கள், சுவைதாளிதப் பயிர்கள், தோட்டப்பயிர்கள் எனப் பல்வகைப்பட்ட பயிர்களின் சாகுபடி தமிழகத்தில் மேற்கொள்ளப்படுகிறது.

2026-ம் ஆண்டு மே மாதம் 10-ம் தேதி தமிழக முதல்வராக பொறுப்பேற்றதிலிருந்து, பல்வேறு துறைகளின் செயல்பாடுகளைத் துறைவாரியாக ஆய்வு செய்து வருவதாகவும், வேளாண்மை - உழவர் நலத்துறையின் செயல்பாடுகள் குறித்த தனது ஆய்வின்போது, 2026-ம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட உரத்தேவையில், 39,001 மெட்ரிக் டன் யூரியா, 28,607 மெட்ரிக் டன் டிஏபி மற்றும் 24,235 மெட்ரிக் டன் பொட்டாஷ் ஆகிய உரங்கள் உர உற்பத்தியாளர்களால் தமிழகத்துக்கு வழங்கப்படவில்லை.

மேலும், மாநிலம் முழுவதும் நெல், உளுந்து, பச்சைப்பயறு, நிலக்கடலை, எள், தோட்டக்கலைப் பயிர்கள் ஆகியவற்றின் சாகுபடிப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. தென்மேற்குப் பருவமழை மே மாதம் மூன்றாம் வாரத்தில் துவங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தினால் கணிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதாலும், காரீப் பருவத்தில் அதிகபட்ச பரப்பில் பயிர் சாகுபடி மேற்கொள்ள விவசாயிகள் மத்தியில் ஆர்வம் எழுந்துள்ள நிலையில், யூரியா மற்றும் டிஏபி உரங்களின் தேவை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இத்தருணத்தில், உரப்பற்றாக்குறை ஏற்பட்டால் மாநிலத்தின் உணவுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளது.

இந்நிலையில், நடப்பு காரீப் பருவத்தில் மொத்த சாகுபடிப் பரப்பில் 40 சதவீதமான 25 லட்சம் ஹெக்டரில் பல்வேறு பயிர்களை சாகுபடி செய்வதற்கு ஏதுவாக, தேவையான உரங்கள் கிடைப்பதை உறுதி செய்வதில் மாநில அரசு உறுதி பூண்டுள்ளது. பல்வேறு சாதகமான காரணிகளால் நடப்பு காரீப் பருவத்தில் பயிர் சாகுபடியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால், யூரியா, டிஏபி போன்ற நேரடி உரங்களின் தேவை எதிர்வரும் நாட்களில் கணிசமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதனை நிறைவு செய்திட 3.83 லட்சம் மெட்ரிக் டன் யூரியா, 1.05 லட்சம் மெட்ரிக் டன் டிஏபி மற்றும் 0.83 லட்சம் மெட்ரிக் டன் பொட்டாஷ் ஆகியவற்றை உடனடியாக தமிழகத்துக்கு வழங்கிட உரிய அலுவலர்களுக்குத் தேவையான அறிவுறுத்தல்களை வழங்கி குறித்த நேரத்தில் உரங்கள் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்று முதல்வர் விஜய் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்துக்கு தேவையான உரங்களை தடையின்றி வழங்கிட பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்
இசை அரசனை காயப்படுத்தும் எண்ணம் இல்லை: இளையராஜாவிடம் வருத்தம் தெரிவித்த ‘கருப்பு’ படக்குழு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in