சொத்து குவிப்பு வழக்கில் சி.விஜயபாஸ்கரிடம் அமலாக்கத் துறை 9 மணி நேரம் விசாரணை

மனைவி ரம்யா இன்று ஆஜராகிறார்
சொத்து குவிப்பு வழக்கில் சி.விஜயபாஸ்கரிடம் அமலாக்கத் துறை 9 மணி நேரம் விசாரணை
Updated on: 
1 min read

சென்னை: கடந்த 2016–2021-ம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் சுகாதாரத் துறை அமைச்சராகப் பதவி வகித்த சி.விஜயபாஸ்கர், வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகக் கூறி, 2021-ம் ஆண்டு தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்து, சுமார் ரூ.35.79 கோடி மதிப்பிலான சொத்துகள் வருமானத்துக்கு அதிகமாகச் சேர்க்கப்பட்டதாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

அதைத்தொடர்ந்து, 2024-ம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள விஜயபாஸ்கரின் வீட்டில் அமலாக்கத் துறையும் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றியது.

இந்த வழக்கில் நவ.6-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு சி.விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவிக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால் இருவரும் ஆஜராகவில்லை. இதையடுத்து, நவ.18-ம் தேதி விஜயபாஸ்கரும், 19-ம் தேதி அவரது மனைவி ரம்யாவும் ஆஜராகுமாறு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது.

அதன்படி, நேற்று காலை 9 மணியளவில் நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் விஜயபாஸ்கர் ஆஜரானார். அப்போது, அவரிடம் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகக் கூறப்படும் புகார், சொத்துகளுக்கான நிதி ஆதாரங்கள், வங்கிப் பரிவர்த்தனைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் தொடர்பான நிதி விவரங்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

சுமார் 9 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர், விசாரணை முடிந்து மாலை 6.30 மணி அளவில் வெளியே வந்த அவர் காரில் புறப்பட்டு சென்றார். இன்று அவரது மனைவி ரம்யா விசாரணைக்கு ஆஜராக உள்ளார்.

சொத்து குவிப்பு வழக்கில் சி.விஜயபாஸ்கரிடம் அமலாக்கத் துறை 9 மணி நேரம் விசாரணை
புதிய கட்டிட விதிகள் படி கூடுதல் பரப்புக்கு மட்டுமே கட்டணம்: வீட்டுவசதி, நகராட்சி நிர்வாகத் துறைகள் அறிவுறுத்தல்

X