

மதுரை: நிதிச்சுமை காரணத்தை காட்டி ஊழியர்களுக்கு சலுகை வழங்குவதை மறுக்கக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய வருங்கால வைப்பு நிதி ஆணையம் 1.9.2014 முதல் மாதம் ரூ.15,000 என்ற திருத்தப் பட்ட வாதிய வரம்புக்கு மேற்பட்ட ஊதியத்தின் மீதும் ஓய்வூதியப் பங்களிப்பை செலுத்த முதலாளி, ஊழியர் இருவரும் கூட்டாக விருப்பத் தேர்வு அளிக்கலாம் என 22.08.2014-ல் அறிவித்தது. ஆனால் அறக்கட்டளை விதிகளின் அடிப்படையில் இயங்கும் நிறுவனங்களின் கூட்டு விருப்பத் தேர்வு விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. இதை வருங்கால வைப்பு நிதி அலுவலகம் நிராகரித்தது.
இதை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த தனி நீதிபதி, அறக்கட்டளை நிதிகளின் அடிப்படையில் இயங்கும் நிறுவனங்களின் கோரிக்கையை நிராகரித்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தார். இதற்கு எதிராக மத்திய வருங்கால வைப்பு நிதி ஆணையர், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார்.
மனுவை நீதிபதிகள் சதீஷ் குமார், ஜோதிராமன் விசாரித்து பிறப்பித்த உத்தரவு:
சட்டரீதியான வரம்பைவிட அதிகமான உண்மையான மையான ஊதியத்தின் அடிப்படையில் ஓய்வூதிய நிதியில் பங்களிக்க நிறுவன உரிமையாளருக்கும், சம்பந்தப் பட்ட ஊழியருக்கும் வாய்ப்பளிக் கும் வகையில் சட்டம், பலன்களை வழங்கியுள்ளது. அந்த பலனை அறக்கட்டளை விதிகளைச் சுட்டிக்காட்டி பறிக்கவோ, குறைக்கவோ முடியாது.
விதிப்படி கூட்டு விருப்பத் தேர்வை மேற்கொள்ளத் தகுதியுள்ள ஓய்வூதியர்கள் அனைவருக்கும் வாய்ப்பளிக்கும் வகையில் உச்ச நீதிமன்றம் 4 மாத அவகாசம் வழங்கியது. இந்தச் சலுகைகளை நீட்டிப்பதால் அரசுக்கு ஏற்படும் நிதிச்சுமை தொடர்பாக தெரிவிக்கப்படும் அச்சத்தை ஏற்க முடியாது. சட்டப்படி ஊழியர்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட உரிமை களை பறிப்பதற்கு நிதி சார்ந்த பாதிப்புகள் ஒரு செல்லுபடியான காரணமாக இருக்க முடியாது.
ஒரு திட்டத்தை செயல்படுத்த கூடுதல் நிதி தேவைப்படும் என்ற ஒரே காரணத்துக்காக ஊழியர்களுக்கு சலுகைகள் வழங்கமறுப்பதை நியாயப்படுத்த முடியாது. இந்த சலுகை வழங்குவதால் ஏற்படும் நிதிச்சுமை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டு முறையாக பரிசீலிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் அதே காரணத்தை மீண்டும் எழுப்புவதை அனுமதிக்க முடியாது.
எனவே, மத்திய வருங்கால வைப்பு நிதி ஆணையர் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. ஊழியர்கள், நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுக்கள் அனுமதிக்கப்படுகின்றன. உச்ச நீதிமன்ற உத்தரவு மற்றும் சட்டப்படி 1.9.2014-க்கு முன்னதாக ஓய்வு பெற்ற ஊழியர்களின் கோரிக்கைகளைப் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வருங்கால வைப்பு நிதி ஆணையருக்கு உத்தரவிடப்படுகிறது. பணியில் இருக்கும் ஊழியர்களைப் பொறுத்தவரை அவர்களின் கோரிக்கைகளை சட்டப்படி பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.