

சென்னை: கோடை வெயிலின் தாக்கம் காரணமாக, தமிழகத்தின் மின் நுகர்வு 466.16 மில்லியன் யூனிட்கள் என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. வெப்பம் அதிகரித்துள்ளால் வீடுகளில் எந்த நேரமும் மின் விசிறிகள் ஓடிக் கொண்டே இருக்கின்றன.
இரவு நேரங்களில் ஏசி பயன்பாடு அதிகரித்துள்ளது. தமிழகத்தின் தினசரி மின்சார தேவை சராசரியாக 16 ஆயிரம் மெகாவாட் என்ற அளவில் இருக்கும். கோடை காலங்களில் 20 ஆயிரம் மெகாவாட்டையும் கடந்து மின் தேவை அதிகரிக்கும்.
தமிழகத்தில் கடந்த 2024-ம் ஆண்டு மே 2-ம் தேதி மின்சார தேவை 20,830 மெகாவாட் பதிவான நிலையில், இந்த ஆண்டு கோடை காலத்துக்கு முன்பு இதுவே அதிகபட்ச அளவாக இருந்த நிலையில், கடந்த ஏப்.17-ம் தேதி 21,010 மெகாவாட் மின் தேவை பதிவாகி புதிய உச்சத்தை எட்டியது.
இந்நிலையில், நேற்று முன்தினம் (22-ம் தேதி) இதுவரை இல்லாத அளவில் 21,051 மெகாவாட் மின் தேவை பதிவாகியுள்ளது. இதேபோல, மின் நுகர்வு புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
இந்த ஆண்டு கோடைகாலத்துக்கு முன்பாக 2024-ம் ஆண்டு ஏப்.30-ம் தேதி மின் நுகர்வு 454.32 மில்லியன் யூனிட்களாக இருந்த நிலையில், கடந்த 18-ம் தேதி 462.66 மில்லியன் யூனிட்கள் மின் நுகர்வு இருந்தது.
தற்போது, இந்த அளவையும் தாண்டி நேற்று முன்தினம் (22-ம் தேதி) 466.16 மில்லியன் யூனிட்கள் மின் நுகர்வு பதிவானது. இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், “வழக்கமாக மின்சாரத் தேவை மதிய நேரத்தில் தான் உச்சத்தில் இருக்கும்.
ஆனால், இந்த ஆண்டு இரவு நேரங்களில் வெப்பத்தின் தாக்கம் மிக அதிகமாக இருப்பதால், வீடுகளில் ஏசி பயன்பாடு பல மடங்கு அதிகரித்துள்ளது.
இதுவே மின் தேவை புதிய உச்சத்தைத் தொட முதன்மையான காரணமாக அமைந்துள்ளது. மேலும், வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் போது 23 ஆயிரம் மெகாவாட் வரை மின் தேவை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது” என்றனர்.