

படம்: எல் சீனிவாசன்
சென்னை: செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை நோக்கிச் சென்ற மின்சார ரயில், கோட்டை ரயில் நிலையத்தில் திடீரென தடம் புரண்டது. இதனால், செங்கல்பட்டு - சென்னை கடற்கரை வழித்தடத்தில் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக மின்சார ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. இதனால், பயணிகள் கடும் அவதிப்பட்டனர்.
செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இருந்து நேற்று காலை ஒரு மின்சார ரயில், பயணிகளுடன் கடற்கரை ரயில் நிலையம் நோக்கி சென்றது. இந்த ரயில் நேற்று காலை 10:42 மணி அளவில், சென்னை கோட்டை ரயில் நிலையத்தின் 1-வது நடைமேடையில் நுழைந்தபோது, ரயிலின் 7-வது பெட்டியின் சக்கரங்கள் திடீரென தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கி தடம் புரண்டன. உடனே ரயிலில் இருந்த பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்ததால், அங்கு பதற்றமான சூழல் நிலவியது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை.
இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த ரயில்வே ஊழியர்கள் தடம் புரண்ட ரயில் பெட்டியை மீண்டும் தண்டவாளத்தில் நிலைநிறுத்தும் பணிகளைத் தொடங்கினர். இதற்கிடையில், செங்கல்பட்டு, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கடற்கரை நோக்கி வந்த ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. பயணிகளின் சிரமத்தைக் குறைக்கும் விதமாக, தாம்பரம், செங்கல்பட்டு நோக்கிச் சென்ற ரயில்களின் புறப்பாடு தற்காலிகமாக சென்னை பூங்கா ரயில் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. மேலும், சில சேவைகள் சென்னை எழும்பூர் வழியாக இயக்கப்பட்டன.
அதேநேரம், தடம் புரண்ட ரயிலை சீரமைப்பதற்காக, விபத்து நிவாரண ரயில் கோட்டை ரயில் நிலையத்துக்கு விரைந்து வந்தது. ரயில்வே பொறியாளர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டனர். அதிநவீன தொழில்நுட்ப மற்றும் இயந்திரவியல் கருவிகளின் உதவியுடன் தடம் புரண்ட ரயில் பெட்டியின் சக்கரங்களை மீண்டும் தண்டவாளத்தில் நிலைநிறுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஒரு புறம் தடம் புரண்ட ரயில் பெட்டியை சீரமைக்கும் பணிகள் நடைபெற்ற நிலையில், மறுபுறம் கோட்டை ரயில் நிலையத்துக்கு சுமார் 200 மீட்டர் முன்பாக தண்டவாளத்தில் ஏற்பட்ட பழுதையும் ரயில்வே ஊழியர்கள் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒன்றரை மணி நேரம் போராடி, தடம் புரண்ட ரயிலின் சக்கரங்கள் மீண்டும் தண்டவாளத்தில் நிலைநிறுத்தப்பட்டன.
தொடர்ந்து, நண்பகல் 12.57 மணிக்கு ரயில் பெட்டிகள் அங்கிருந்து அகற்றப்பட்டன. தொடர்ந்து தண்டவாளத்தை சீரமைத்து, இத்தடத்தில் ரயில் இயக்கம் பிற்பகல் 3.30 மணிக்கு பிறகு சீரானது. இந்த சம்பவத்தால், சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக செங்கல்பட்டு- தாம்பரம்- சென்னை கடற்கரை மார்க்கத்தில், மின்சார ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. பயணிகள் கடும் அவதிப்பட்டனர்.